Vasudev Acharya: வாசுதேவ் ஆச்சார்யா காலமான நிலையில், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
வாசுதேவ் ஆச்சார்யா மரணம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநிலத்தின் பங்குரா தொகுதியில் இருந்து 9 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவருமான வாசுதேவ் ஆச்சார்யா காலமானார். அவருக்கு வயது 81. நீண்ட நாட்களாக வயது மூப்பால் ஏற்படும் பல நோய்களால் அவதிப்பட்டு வந்த அவர், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். வாசுதேவிற்கு வெளிநாட்டில் ஒரு மகள் இருப்பதாகவும், அவர் செகந்திராபாத் வந்த பிறகு இறுதிச் சடங்குகள் செய்யப்படும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரும், பொலிட்பீரோ உறுப்பினருமான முகமது சலீம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல்:
வாசுதேவ் ஆச்சார்யாவின் மறைவிற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “மூத்த இடதுசாரி தலைவரும், முன்னாள் எம்பியுமான வாசுதேவ் ஆச்சார்யாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு தொழிற்சங்கத் தலைவராகவும், வலிமைமிக்க நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார். அவரது மறைவு பொது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க இழப்பை ஏற்படுத்தும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு இரங்கல்” என குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று பல்வேறு அரசியல் தலைவர்களும், வாசுதேவ் ஆச்சார்யாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
9 முறை எம்.பியான வாசுதேவ் ஆச்சார்யா:
பல நூற்றாண்டுகளுக்கு முன் ஶ்ரீரங்கத்திலிருந்து மேற்கு வங்கம் புருலியாவில் குடியேறிய, ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்தவர் தான் இந்த வாசுதேவ் ஆச்சார்யா. 1942ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி புருலியாவில் பிறந்தவர், அங்கிருந்து தனது கல்வியை முடித்தார். மாணவப் பருவத்திலேயே இடதுசாரி இயக்கத்தில் சேர்ந்தார். பல்வேறு பழங்குடி இயக்கங்கள் மற்றும் எழுத்தறிவு பரப்புரைகளில் ஈடுபட்டதன் மூலம் பஸ்சிமாஞ்சல் பிராந்தியத்தின் தலைவர்களில் முக்கியமானவராக உருவெடுத்தார்.
வாசுதேவ் 1980 ஆம் ஆண்டு பங்குரா மக்களவைத் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு, 2014-ம் ஆண்டு வரை தொடர்ந்து எம்.பி.யாக இருந்தார். வாசுதேவ் ரயில்வே ஊழியர்களின் இயக்கத்தின் முக்கிய முகமாகவும் இருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் வேட்பாளரும் நடிகையுமான மூன்மூன் சென்னிடம் தோல்வியடைந்தார்.