நாடு முழுவதும் உள்ள வாகன ஓட்டிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி நவம்பர் 15 ஆம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வரவுள்ளன. இந்த விதிமுறையின்படி, நீங்கள் பணமாக சுங்கக் கட்டணம் செலுத்தினால், வழமையான கட்டணத்தை விட இருமடங்கு கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்.

Continues below advertisement

எதற்கு இந்த மாற்றம்?

இந்த அதிரடி மாற்றம், சுங்கச் சாவடிகளில் மின்னணு கட்டண முறையான 'ஃபாஸ்டேக்' பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் கொண்டு வரப்படுகிறது. மத்திய அரசு, நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், சுங்கக் கட்டண வசூலை டிஜிட்டல் மயமாக்கவும் பல ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

தற்போது, பல சுங்கச்சாவடிகளில் 'ஃபாஸ்டேக்' இல்லாத வழித்தடம் (Non-FASTag Lane) மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்த பிறகு, பணமாகச் செலுத்தும் வாகனங்களுக்கான தனி வழித்தடங்கள் பெரும்பாலும் நீக்கப்படலாம் அல்லது மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே செயல்படலாம். இது சுங்கக் கட்டணத்தைப் பணமாகச் செலுத்துபவர்களுக்குக் கூடுதல் சிரமத்தையும், அதிக செலவையும் ஏற்படுத்தும்.

Continues below advertisement

கட்டாயமாகும் ஃபாஸ்டேக்

வாகன ஓட்டிகள் இனி சுங்கச்சாவடிகளில் காலதாமதம் ஏற்படுவதையும், இருமடங்கு கட்டணம் செலுத்துவதையும் தவிர்க்க, கட்டாயமாக ஃபாஸ்டேக் பொருத்திக்கொள்வது அவசியமாகிறது. ஃபாஸ்டேக் என்பது வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்படும் ஒரு மின்னணு குறியீடு (RFID Tag). இது வங்கிகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த டேக் மூலம் சுங்கச்சாவடிகளைக் கடக்கும்போது தானாகவே இணையம் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும்.

இந்த மாற்றத்தால், சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகள் தவிர்க்கப்படும் என்றும், எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சுங்கக் கட்டண வசூல் முறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் எனவும் அரசு நம்புகிறது.

டிஜிட்டல்மயமாக்கும் முயற்சி

ஆகவே, வாகன ஓட்டிகள் அனைவரும் உடனடியாக தங்கள் வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் பொருத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது நேரத்தையும் பணத்தையும் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், நாட்டை டிஜிட்டல்மயமாக்கும் முயற்சிக்கும் உறுதுணையாக இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.