சுங்கக் கட்டண சாவடிகளில் இனி ஆண்டு முழுமைக்குமான ஃபாஸ்ட்டேக் பாஸ் முறையை மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகிறது. 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி, நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் பயணிகள் பயணிக்கலாம்.

இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளதாவது:

பதிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து சரியாக ஓர் ஆண்டு வரையோ அல்லது அதிகபட்சமாக 200 பயணங்களுக்கோ  ஃபாஸ்ட்டேக் பாஸை வருடாந்திர பயன்படுத்திக் கொள்ளலாம். எனினும் இது வணிகப் பயன்பாடு அல்லாத தனி நபர்களின் கார், ஜீப் மற்றும் வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் தடையற்ற மற்றும் செலவு குறைந்த பயணத்தை இந்த வருடாந்திர பாஸ் அளிக்கும்.

பயன்படுத்துவது எப்படி?

இந்த பாஸை செயல்படுத்துதல் மற்றும் புதுப்பித்தலுக்கான பிரத்யேக இணைப்பு, விரைவில் ராஜ்மார்க் யாத்ரா (Rajmarg Yatra App) செயலியிலும், NHAI மற்றும் MoRTH ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கும்.

எதற்காக இந்த பாஸ்?

இந்த நடைமுறை 60 கிமீ வரம்பிற்குள் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் தொடர்பான நீண்டகால கோரிக்கைகளை நிவர்த்தி செய்யும். மேலும் ஒற்றை, விலை குறைவான பரிவர்த்தனை மூலம் சுங்கக் கட்டணங்களை எளிதாக்குகிறது.

இந்த பாஸை பயன்படுத்துவதன் மூலம் காத்திருப்பு நேரங்களைக் குறைக்க முடியும். கூட்ட நெரிசலைக் குறைக்கலாம். சுங்கச் சாவடிகளில் ஏற்படும் தகராறுகளைக் குறைப்பதன் மூலமும், லட்சக் கணக்கான தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விரைவான மற்றும் எளிமையான பயண அனுபவத்தை பாஸ் வழங்கும்.  

இவ்வாறு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.