உத்தரபிரதேச மாநிலத்தில் 20 வயது பெண் ஒருவர் காணாமல் போன விவகாரத்தில், அவர் பாம்பாக மாறி விட்டதாக தகவல் பரவி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
உத்தரபிரதேசத்தின் அவுரையா மாவட்டத்தில் தான் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. அங்குள்ள சிங்கண்பூர் கிராமத்தின் ஒரு வீட்டில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் பிப்ரவரி 9ம் தேதி இரவு வழக்கம்போல தனது அறையில் தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலையில் அந்த பெண்ணை எழுப்ப அவரது தாயார் அறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவரின் படுக்கையில் அந்த பெண்ணை காணவில்லை. சுற்றும் முற்றும் தேடியும் அந்த பெண் எங்கேயும் இல்லை. இதனால் அவரின் குடும்பத்தினர் பதறிப்போயினர். இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் பரவியது. அக்கம் பக்கத்து மக்களும் கிராமம் முழுவதும் அந்த பெண்ணை தேடினர்.
இந்த நிலையில் அந்த பெண் ஏதேனும் கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விட்டாரா அல்லது யாரேனும் கடத்தி விட்டார்களா என புரியாமல் குடும்பத்தினர் திணறினர். இந்த சம்பவம் தொடர்பாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே எதேச்சையாக அந்த பெண்ணின் படுக்கையறையில் இருந்த கட்டில் பெட்டில் இருந்த போர்வையை விலக்கி பார்த்தபோது அதில் அந்த பெண் அணிருந்திருந்த உடைகள், நகைகள் அங்கு கிடந்தது. அதேசமயம் வழக்கத்துக்கு மாறாக 5 அடி நீளமுள்ள பாம்புத் தோல் போல ஒன்று கிடந்துள்ளது.
இந்த தகவல் அந்த கிராமம் முழுவதும் தீயாக பரவியது. உடனடியாக அனைவரும் பதற்றமடைந்தனர். அந்த பெண் இச்சாதாரி நாகினியாக மாறி விட்டதாக பலரும் பேசத் தொடங்கினர். அந்த பெண் தூங்கிய அறையின் தரையில் ஒரு பாம்பு குழி கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் கடந்த காலங்களில் அவர்கள் வீட்டுக்குள் அடிக்கடி பாம்புகள் இருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதனால் காணாமல் போன பெண் என்னானார் என பீதி கிளம்பியது. அவர் பாம்பாக மாறி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்தது. ஊடகங்கள் அனைத்தும் சிங்கண்பூர் கிராமத்தில் குவிந்தது. நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், எங்கள் மகள் பாதுகாப்பாக திரும்பி வர வேண்டும் என ஊடகத்தினரிடம் அந்த பெண்ணின் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையில் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று காவல்துறை கிராம மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பெண் பாம்பாக மாறியதாக வெளியான செய்திகள் வெறும் வதந்திகள் எனவும், பாம்புத் தோல் மற்றும் உடைகள் இருப்பது விசாரணையைத் தவறாக வழிநடத்த செய்யப்பட்டதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் செல்போன்கள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் போன்றவை ஆய்வு செய்யப்படுவதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
