இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனா, பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தன்னை பலப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தெற்காசியாவில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான், இலங்கை வரிசையில் மாலத்தீவு அரசுடன் நெருக்கமான உறவை சீனா பேணி வருகிறது. 


இந்தியாவை சுத்துப்போடும் சீனா:


இது, இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ள நிலையில், புதிய மாலத்தீவு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு புதிய சிக்கலை உண்டாக்கியது. மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்ததில் இருந்து இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் கருத்து தெரிவித்தது வரை தொடர் பதற்றம் நீடித்து வருகிறது.


இதற்கிடையே, சீன உளவு கப்பல் ஒன்று இந்திய பெருங்கடலில் நுழைந்து அது மாலத்தீவை நோக்கி சென்றதாக தகவல் வெளியானது. மாலத்தீவு தலைநகர் மாலேவை நோக்கி சீன கப்பல் சியாங் யாங் ஹாங் 03 சென்றதாக கூறப்படுகிறது. இது, இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.


இந்த நிலையில், சீனாவின் ஆதிக்கம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் முக்கியத்துவம் வாய்ந்த கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனா ஆதிக்கம் செலுத்தும் என்பதை ஒப்புக்கொள்வது அவசியம், ஆனால், இம்மாதிரியான அரசியலை கண்டு இந்தியா பயப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.


ஓப்பனாக ஒப்பு கொண்ட மத்திய அமைச்சர்:


மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் மாலத்தீவுடனான உறவு குறித்து மாணவர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "ஒவ்வொரு அண்டை நாடுகளிலும் பிரச்னைகள் உள்ளன. 


ஆனால், இறுதியில் அண்டை நாட்டவருக்கு ஒருவருக்கொருவர் தேவைப்படுகிறார்கள். பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், அதை இந்திய ராஜாங்க உறவின் தோல்வி என்று குறிப்பிடுவது தவறாகும். சீனாவும் ஒரு அண்டை நாடு என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். 


பல வழிகளில், போட்டி அரசியலின் ஒரு பகுதியாக, அண்டை நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்தும். சீனாவைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். உலக அரசியல் என்பதே போட்டியாக மாறிவிட்டது என்று நினைக்கிறேன். நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள், நான் என்னால் முடிந்ததைச் செய்வேன்.


ஒரு பெரிய பொருளாதாரமாக இருப்பதால், வளங்களை பயன்படுத்தி தனக்கு ஏற்ப விஷயங்களை வடிவமைக்க சீனா முயற்சிக்கும். அப்படி அது செய்யக்கூடாது என நாம் ஏன் எதிர்பார்க்க வேண்டும். ஆனால், அதற்கான பதில் சீனா அதைச் செய்கிறது என்று குறை சொல்வதல்ல. இன்று நான் சொல்வேன். போட்டியைக் கண்டு நாம் பயப்படக் கூடாது. நாம் போட்டியை வரவேற்று நான் போட்டியிட முடியும் என்று கூற வேண்டும்.


ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் அண்டை நாடுகளில் பிரச்னைகள் உள்ளன. அவர்கள் சொல்வது போல் அது ஒருபோதும் நல்லதல்ல. அவர்கள் சொல்வது போல் இது ஒருபோதும் மோசமானதல்ல. பிரச்னைகள் இருக்கும். அதை எதிர்பார்த்து, மதிப்பிட்டு, அதற்கு பதிலளிப்பது எங்கள் வேலை. இறுதியில், அண்டை நாடுகள் ஒருவருக்கொருவர் உறவு கொள்வார்கள்" என்றார்.