கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் குழந்தைகள் இருவருக்கு நோரோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 


கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் நோரோ வைரஸ் தொற்று காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் முதலான அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அரசு பரிசோதனை நிலையத்தில் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. பள்ளியில் விநியோகிக்கப்பட்ட மதிய உணவு காரணமாக, மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 


நோரோ வைரஸ் என்றால் என்ன?


நோரோ வைரஸ் என்பது மிக வேகமாக பரவக்கூடிய வைரஸ். வயிற்று ஃப்ளூ காய்ச்சல் எனவும் இதனைக் குறிப்பிடுவது உண்டு. இந்த தொற்றால் மாசடைந்த உணவு, நீர், தரை முதலானவை மூலமாக இது பரவுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் கழிவுகள் மூலமாகவும் இது பரவுகிறது. 


அனைத்து வயதினரையும் தாக்கும் நோரோ வைரஸ், வயிற்றுப்போக்கை உருவாக்கக்கூடியது. எனினும் இந்தத் தொற்று கப்பல்கள், சிறிய மருத்துவமனைகள், ஹாஸ்டல்கள் முதலான மூடப்பட்ட இடங்களில் ஏற்படக்கூடியது. 



உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்களின்படி, நோரோ வைரஸ் தொற்று என்பது குடல் வீக்கத்தோடும், ஊட்டச்சத்து குறைபாடோடும் தொடர்புடையது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த நோய் நீண்ட கால நீடிக்கக்கூடியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 685 மில்லியன் பேரைத் தாக்கும் நோரோ வைரஸ், 5 வயதுக்குக் கீழான குழந்தைகளில் சுமார் 200 மில்லியன் பேரைத் தாக்குகிறது. 


நோரோ வைரஸ் அறிகுறிகள் என்ன?


முதல்கட்ட அறிகுறிகளாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியன தொற்று ஏற்பட்ட ஒன்று அல்லது இரண்டு நாள்களின் ஏற்படுகிறது. நோயாளிகள் தலைசுற்றல், வயிற்று வலி, காய்ச்சல்ம், தலைவலி, உடல் வலி, உடலில் நீர்ச்சத்து குறைபாடு முதலானவற்றையும் எதிர்கொள்கின்றனர். 


நோரோ வைரஸ் தொற்றில் இருந்து தப்பிப்பது எப்படி?


நோரோ வைரஸ் பல்வேறு திரிபுகளைக் கொண்டிருப்பதால் ஒரே நபர் இதனால் பலமுறை பாதிக்கப்படலாம். மேலும், பல்வேறு கிருமிநாசினிகளிடம் இருந்தும் நோரோ வைரஸ் தப்பிப்பதோடு, சுமார் 60 டிகிரி செல்சியஸ் வெப்பம் வரை உயிர் வாழ்கிறது. எனவே உணவைச் சூடு செய்வதும், நீரில் க்ளோரின் கலப்பதும் மட்டுமே இந்த வைரஸைக் கொல்வதில்லை. மேலும், நாம் கைகளில் பயன்படுத்தும் சானிடைசர்களிடம் இருந்தும் இந்த வைரஸால் தப்பிக்க முடியும். 



கழிவறைகளுக்குச் சென்ற பிறகு கைகளுக்கு சோப்பு தேய்த்து கழுவுதலும், குழந்தைகளுக்கு அடிக்கடி டயாபர்களை மாற்றுவது, உணவு தயாரிக்கும் போதும், உண்ணும் போதும் நன்கு கைகளைக் கழுவுவது முதலானவை நோரோ வைரஸ் தொற்றைத் தடுக்கும். 


இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிறரைத் தொடுவது, உணவு சமைப்பது முதலானவற்றைத் தவிர்க்க வேண்டும். 


நோரோ வைரஸ் பாதிப்புக்கு என்ன சிகிச்சை?


நோரோ வைரஸ் தொற்று விரைவில் குணமாகக்கூடியது. ஒரு நோயாளியை வதைத்தாலும், இரண்டு முதல் மூன்று நாள்களுக்குள் குணமாகிவிடுகிறது. வயதானவர்கள் நோரோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் போது, போதிய ஓய்வும், நீர்ச்சத்தும் வழங்கப்பட வேண்டும். இந்த நோய்த் தொற்றைத் தவிர்க்க பிரத்யேக மருந்துகள் இல்லை.