உத்தராகண்ட் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், அம்மாநிலத்தின் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ஹரக் சிங் ராவத் மீண்டும் தான் இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சியிலேயே இணைந்துள்ளார். இந்த இணைப்பு உத்தராகண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் முன்னிலையில் நடந்துள்ளது. 


கடந்த ஜனவரி 17 அன்று, கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டும், மாநில அமைச்சரவையில் இருந்தும், பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டார் ஹரக் சிங் ராவத். இதுகுறித்து அப்போது பேசிய உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, `ஹரக் சிங் ராவத் எங்களோடு இருந்தவரை அவருக்கான மரியாதையை முறையாக வழங்கினோம். சமீபத்தில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக தகவல்கள் கிடைத்தன. அதனால் அவரை நீக்க எங்கள் தலைமை முடிவு செய்துள்ளது. நாங்கள் எங்கள் நடவடிக்கையை மேற்கொண்டு விட்டோம். இனி காங்கிரஸ் கட்சி தான் அவருக்கான முடிவைத் தேர்வு செய்ய வேண்டும்’ எனக் கூறியிருந்தார். 


கடந்த 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்த 10 சட்டமன்ற உறுப்பினர்களுள் ஹரக் சிங் ராவத்தும் ஒருவர். 



பாஜக தேசியத் தலைவர் ஜே.பி நட்டாவுடன் ஹரக் சிங் ராவத்


 


ஹரக் சிங் ராவத் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் வருவது குறித்து முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத்திற்கு விருப்பம் இல்லை எனவும், அவர் கட்சியின் தேசியத் தலைமையிடம்  இதுகுறித்து பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும் ஹரக் சிங் ராவத் அதிக நிபந்தனைகளோடு வந்திருப்பதால் அவரைப் பெரிதாகக் கருதக் கூடாது எனவும் ஹரிஷ் ராவத் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


`எனக்கு யார் மீதும் கோபம் இல்லை. ஹரக் சிங் ராவத் மீண்டும் கட்சிக்குள் சேர்க்கப்படுவாரா, மாட்டாரா என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்யும். காங்கிரஸ் தலைமை எடுக்கும் எந்த முடிவுக்கும் நான் கட்டுப்படுவேன். ஹரக் சிங் ராவத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை’ என ஹரிஷ் ராவத் கடந்த சில நாள்களுக்கு முன் பேசியிருந்தார். 



காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹரக் சிங் ராவத்


 


தொடர்ந்து அவர், `காங்கிரஸ் கட்சி கடவுளைப் போன்றது; கடவுளுக்குப் பல்வேறு பக்தர்கள் இருப்பார்கள். அனைத்து பக்தர்களும் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தற்போது இந்த விவகாரம் கடவுளுக்கும் பக்தருக்கும் இடையிலான உறவைப் பொருத்தது. பக்தர் கடவுளை மகிழ்விக்கிறாரா, கடவுள் பக்தரை ஏற்றுக் கொள்வாரா என்பது இனி தான் தெரியும்’ என்றும் கூறியிருந்தார் ஹரிஷ் ராவத். இதில் `அனைத்து பக்தர்களும் நல்லவர்களாகவே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை’ என்று அவர் சுட்டிக் காட்டியிருப்பது ஹரக் சிங் ராவத்தை தான் எனக் கூறப்படுகிறது. 


வரும் பிப்ரவரி 14 அன்று, உத்தராகண்ட் மாநிலத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.