மாசுபாட்டிலிருந்து மக்களைப் பாதுகாக்க பட்டாசுகளுக்கு தடை விதிப்பது அவசியம் என்றும் இதில் இந்து, முஸ்லீம் கோணம் என எதுவும் இல்லை என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.


"இந்துக்களை டார்கெட் செய்கின்றனர்"


டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. 


இப்படிப்பட்ட சூழலில், டெல்லியில் பட்டாசுகளை வெடிக்க கடந்த சில ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வரும் 2025ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் வெடிக்க முழுத் தடை விதித்து டெல்லி அரசு இந்த மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டது.


(மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 மற்றும் ஆன்லைன் விற்பனை மற்றும் விநியோக சட்டத்தின் கீழ் இந்த உத்தரவை டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்தது. இதற்கு பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்:


இந்துக்களின் பண்டிகையை குறிவைத்து இப்படி செய்வதாக அவர்கள் விமர்சித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள டெல்லி முன்னாள் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், இதில் இந்து, முஸ்லீம் என பாகுபாடு காட்டப்படவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய அவர், "தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிக்காமல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றி கொண்டாட வேண்டும்.


நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யவில்லை, நமக்கு நாமே நன்மை செய்கிறோம். ஏனென்றால், ஏற்படும் மாசுபாட்டால் இறுதியில் நாமும் நமது சிறு குழந்தைகளும்தான் பாதிக்கப்படுகிறோம் (பட்டாசுகளை வெடிப்பதன் மூலம்). இதில் இந்து-முஸ்லிம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொருவருக்கும் சுவாசமும் உயிரும் அவசியம்" என்றார்.


சுவாசு கோளாறுகள் உட்பட, ஆஸ்துமா தொடங்கி நுரையீரல் புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு காற்றின் தரம் டெல்லியில் மோசமாக இருக்கிறது.