"இந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களிடமிருந்து நம் நாட்டைக் காப்பாற்ற முயற்சிக்கும் ஒவ்வொரு இந்தியரின் வீடும் உங்கள் வீடு தான் ராகுல் காந்தி" என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார். அவர் இக்கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்லார். பிரகாஷ் ராஜ் கடந்த பல ஆண்டுகளாகவே மத்திய அரசை பல்வேறு பிரச்சினைகளிலும் வன்மையாகக் கண்டித்து வருகிறார். #justasking என்ற ஹேஷ்டேகின் கீழ் அவர் பல்வேறு காட்டமான கருத்துகளை அவ்வப்போது பகிர்வது வழக்கம். இந்நிலையில் ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டதால் அவர் வசித்துவந்த பங்களாவை காலி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ட்வீட்டைப் பகிர்ந்துள்ளார்.
வழக்கு; தண்டனை:
2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரசாரத்தில் சர்ச்சையாக பேசிய புகாரில் ராகுலுக்கு எதிராக சூரத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ராகுல்காந்தி தரப்பில் ஜாமின் கோரப்பட்டது.
தொடர்ந்து நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அனுமதியும் வழங்கியது. ரூ. 15,000 பிணைத்தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமீன் பெற நீதிமன்றம் நிபந்தனை விதித்தது. நீதிமன்ற விசாரணையின்போது, தனது எண்ணம் தவறில்லை எனவும் தனக்கு குறைந்த தண்டனை வழங்க வேண்டும் எனவும் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து விசாரணையின் போது அவர் கூறியதற்கு மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டார்.
தகுதி நீக்கம்:
2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்ட 24 மணி நேரத்திலேயே அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் ராகுல் காந்திக்கு டெல்லியில் துக்ளக் லேன் பகுதியில் அரசு பங்களா ஒதுக்கப்பட்டிருந்தது. நான்கு முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, கடந்த 2005 முதல் இந்த பங்களாவில் வசித்து வருகிறார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அரசு பங்களாவை காலி செய்வதற்கான நோட்டீசை ராகுல் காந்திக்கு அனுப்ப மக்களவைக்கான பங்களா ஒதுக்கீடு குழு முடிவு செய்தது. இதையடுத்து, அதற்கான நோட்டீசை மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு அனுப்பியது. ''எனக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்கிறேன். இதுவரை இங்கு கழித்த நினைவுகள் மகிழ்ச்சியானவை. நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் இதற்கான வாய்ப்பை வழங்கிய மக்களுக்கு நன்றி. பங்களாவை காலி செய்வதற்காக எனக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் உள்ள அம்சங்களுக்கு நான் கட்டுப்படுவேன்'' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ராகுல் காந்திக்காக தனது பங்களாவை தருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கி கட்சிப் பிரமுகர்கள் பலரும் ஆதரவுக் குரல் எழுப்பி வருகின்றனர். பல பிரபலங்களும் இவ்வாறு கூறி வரும் நிலையில் பிரகாஷ் ராஜும் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.