இணையதளங்களில் காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அதிகமாக வைரலாகும். அதிலும் குறிப்பாக குரங்குகள் யானைகள் சிங்கம் புலி போன்றவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் ரசித்துப் பார்ப்பார்கள். அந்தவகையில் தற்போது யானை ஒன்றின் க்யூட்டான வீடியோ பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.


தண்ணீர் வேண்டும் என்பதற்காக யானை ஒன்று அடி பம்ப்பில் தனது தும்பிக்கையை வைத்து அடித்து தண்ணீர் குடிக்கிறது. பம்ப்பில் தண்ணீர் அடித்து தாகம் தணித்த வீடியோ இணையத்தில் வைரலாக உலாவி வருகிறது. தண்ணீரின் தேவை யானை உணர்ந்திருப்பதால் தேவையான அளவு மட்டுமே பம்பிலிருந்து இரைத்து குடித்துள்ளது என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.



தண்ணீர் எவ்வளவு இன்றியமையாதது என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படியான நேரத்தில் நாம் எவ்வாறான தண்ணீர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என்றும் நாம் அறிவோம். அதனை பாதுகாக்க, அடுத்தடுத்த தலைமுறையினரை தாகத்தில் துன்புறுத்தாமல் இருக்க, அரசு பலவகையில் முயற்சிகள் எடுத்து வருகின்றன. மழைநீர் சேகரிப்பு, ஆறுகள் தூர்வாருதல், மணல் கொள்ளை தடுப்பு போன்ற பலவற்றை அரசு சார்பில் செய்தாலும், தனிப்பட்ட மனிதர்கள் எந்த அளவுக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துகிறார்கள் என்பதில்தான் மிகப்பெரிய அளவில் மாற்றம் உண்டாகும். அதற்கான முயற்சியும், விழிப்புணர்வும் பல முறைகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.


அந்த வகையில் ஜல் ஷக்தி நிறுவனம், தன்னுடைய தும்பிக்கையை வைத்து யானை தண்ணீர் அடித்து அதனை குடிக்கும் வீடியோவை ஷேர் செய்து, அது தேவையான அளவு மட்டும் குடித்துவிட்டு செல்வதை குறிப்பிட்டு பகிர்ந்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருப்பதாக பலர் கமென்டில் கூறி வருகின்றனர்.



மத்திய ஜல்சக்தி அமைச்சகம் இந்த வீடியோ மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது. அதே போல இந்த வீடியோவை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தங்களுக்கு பிடித்த கேப்ஷன்களை கொடுத்து வருகின்றனர்.


வைரலாக சென்றுகொண்டிருக்கும் இந்த வீடியோவை இதுவரை பதினேழாயிரம் பேர் பார்த்த நிலையில், பலரும் மிக அருமையான வீடியோ என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். அதோடு அந்த யானையை ‘ஜீனியஸ்’ எனவும் நெட்டிசன்கள் அழைத்து வருகின்றனர். அதே போல இந்த யானைக்கு தெரிந்த தண்ணீர் சிக்கனம் கூட சில மனிதர்களுக்கு தெரியவில்லை என்ற விமர்சனங்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்திய வனத்துறை அலுவலர், ரமேஷ் பாண்டேயும் அந்த வீடியோவை ஷேர் செய்து, "நாம் வாழ, தண்ணீரும், விலங்குகளும் மிகவும் அவசியமாகும்" என்று எழுதியுள்ளார்.