தேர்தல் பத்திரம் விவகாரம் நாடு முழுவதும் தொடர் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதி அளித்துள்ளது என்பது தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளால் தெரிய வந்துள்ளது.
தேர்தல் பத்திரத்தில் மெகா ஊழலா?
உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, நன்கொடை அளித்தவர்கள் யார்? எந்தெந்த அரசியல் கட்சிகள் நன்கொடைகளை பெற்றுள்ளது? எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளது என்பது தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
தேர்தல் பத்திரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோதிலும், தேர்தல் பத்திரத்தின் சீரியல் எண்களை (Alphanumeric Number) தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி சமர்ப்பிக்காமல் இருந்தது.
இதனால், எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்தது என்பது தெரியாமல் இருந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவை தொடர்ந்து, சீரியல் எண்களை எஸ்பிஐ வங்கி சமர்பித்தது. அதன் தொடர்ச்சியாக, முழு தகவல்களையும் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.
பாஜகவுக்கு அதிக நன்கொடை அளித்தது யார்?
அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பாஜக, திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு நிதி அளித்தது யார் என்பது தெரிய வந்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மேகா இன்ஜினியரிங் நிறுவனம் (MEIL), பாஜகவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் 584 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
அரசியல் கட்சி ஒன்றுக்கு தேர்தல் பத்திரம் மூலம் கார்ப்பரேட் நிறுவனம் அளித்த அதிகபட்ச நன்கொடை இதுவாகும். பாஜகவை தவிர, பல அரசியல் கட்சிகளுக்கு மேகா இன்ஜினியரிங் நிறுவனம் நன்கொடை அளித்தது தெரிய வந்துள்ளது.
கே. சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கு 195 கோடி ரூபாயும் திமுகவுக்கு 85 கோடி ரூபாயும் மேகா இன்ஜினியரிங் நிறுவனம் நிதி அளித்துள்ளது. மேகா இன்ஜினியரிங் நிறுவனத்தின் துணை நிறுவனங்களும் பல அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு அள்ளி கொடுத்த மேகா நிறுவனம்:
மேகா இன்ஜினியரிங் நிறுவனத்தின் துணை நிறுவனமான வெஸ்டர்ன் உபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி லிமிடெட், காங்கிரஸ் கட்சிக்கு 110 கோடி ரூபாயும் பாஜகவுக்கு 80 கோடி ரூபாயும் நன்கொடை அளித்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் அதிக நிதி அளித்த முதல் 19 நிறுவனங்களும், தங்களின் நன்கொடையில் ஒரு பகுதியை பாஜகவுக்கு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.
லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் Future Gaming and Hotel Services நிறுவனம், மேற்குவங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 542 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி, 2024ஆம் ஆண்டு, ஜனவரி 24ஆம் தேதி வரை வழங்கப்பட்ட தேர்தல் பத்திரத்தின் அடிப்படையில் எந்த நிறுவனம் எந்த அரசியல் கட்சிக்கு எவ்வளவு பணம் வழங்கியுள்ளது என்பது தெரிய வந்துள்ளது.