தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் முறையை கடந்த மாதம் ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 6 ஆண்டுகளில் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் எவ்வளவு நிதி பெற்றுள்ளன? என்பது தொடர்பான விவரங்களை, மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் பத்திரங்களை விநியோகித்த எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது.
தேர்தல் பத்திரங்கள் வழக்கு:
அந்த விவரங்களை தேர்தல் ஆணையம் மார்ச் 13ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட கூடுதல் அவகாசம் வேண்டும் என எஸ்.பி.ஐ. வங்கி உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.
இதுதொடர்பான மனுவில், “நீதிமன்றம், அதன் இடைக்கால உத்தரவில் ஏப்ரல் 12, 2019 முதல், தீர்ப்பின் தேதி வரை அதாவது 15.02.2024 வரை பொது, நன்கொடையாளர் தகவல்களை வெளியிடுமாறு அறிவுறுத்தியுள்ளது. அந்த காலகட்டத்தில், பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக இருபத்தி இரண்டாயிரத்து இருநூற்று பதினேழு (22,217) தேர்தல் பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த பத்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளால் மும்பை பிரதான கிளையில் சீல் செய்யப்பட்டு டெபாசிட் செய்யப்பட்டன. இரண்டு வெவ்வேறு தகவல் பிரிவுகளில் இருப்பதன் மூலம், மொத்தம் நாற்பத்து நான்காயிரத்து நானூற்று முப்பத்து நான்கு (44,434) தகவல் தொகுப்புகள் ஆராய்ந்து, தொகுத்து, ஒப்பிடப்பட வேண்டும்.
எனவே 15.02.2024 தேதியிட்ட தீர்ப்பில் நீதிமன்றம் நிர்ணயித்த மூன்று வார காலக்கெடு முழுப் பணியையும் முடிக்க போதுமானதாக இருக்காது. இதனை கருத்தில் கொண்டு ஜுன் 30ம் தேதி வரை அவகாசம் வழங்க வேண்டும்” என எஸ்பிஐ வங்கி கோரிக்கை வைத்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?
இதற்கு மத்தியில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடாத எஸ்.பி.ஐ. வங்கிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் இந்திய தலைமை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நாளை விசாரிக்க உள்ளது.
சஞ்சீவ் கண்ணா, பி. ஆர். கவாய், ஜே. பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வின் முன்பு மனுக்கள் விசாரணைக்கு வருகிறது.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை வெளியிட எஸ்பிஐ வங்கி கூடுதல் அவகாசம் கேட்டிருப்பது குறித்து மூத்த வழக்கற்ஞர் பிரசாந்த பூஷன் கூறுகையில், “தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் வெளியானால், பல லஞ்ச விவகாரங்கள் மற்றும் அவர்களுக்கு சாதகமாக நடைபெற்ற ஒப்பந்தங்கள்/உதவிகள் வெளிப்படும். இதன் காரணமாக ஏற்கனவே எதிர்பார்த்ததை போல, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எஸ்.பி.ஐ. வங்கி மூலம் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது” என்றார்.