இந்திய தேர்தல் ஆணையத்தில் தேர்தல் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 13ஆம் தேதி அல்லது 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்தல் ஆணையர்கள் ராஜினாமா:


அடுத்த மாத தொடக்கத்தில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையராக பதவி வகித்து வந்த அருண் கோயல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்று கொண்டார்.


இந்திய தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையர் பதவி காலியாக உள்ள நிலையில், தற்போது மற்றோர் தேர்தல் ஆணையர் பதவியும் காலியாகியுள்ளது. மூன்று பேர் கொண்ட இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவி வகித்து வருகிறார்.


மார்ச் 15க்குள் நியமனம்:


இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் இரண்டு புதிய தேர்தல் ஆணையர்களை மார்ச் 15ம் தேதிக்குள் நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேடல் மற்றும் தேர்வுக் குழுக்கள், தேர்வு செய்யப்பட்டவர்களை, குடியரசுத் தலைவரிடம் பரிந்துரை செய்யும். அதையடுத்து, இருவர்களை தேர்தல் ஆணையர்களாக குடியரசுத்தலைவர் நியமனம் செய்வார்.