தெலங்கானா உள்பட 5 மாநில தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. அதன்படி, தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. 


தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நண்பகல் 12 மணிக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும். இதன்பிறகு, 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொள்ளும். 




கடந்த வாரம் மாநில தேர்தல் பார்வையாளர்களை வரவழைத்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை ஆயுட்காலம் வருகின்ற நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் முடிவடைகிறது. 


2018 ஆம் ஆண்டில், இந்த ஐந்து மாநிலங்களில் நான்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது, அதே நேரத்தில் சத்தீஸ்கரில் நக்சல் பிரச்சனையைக் கருத்தில் கொண்டு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. 


மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. மத்தியப் பிரதேசத்தில் பாஜக கட்சி ஆட்சி செய்யும் நிலையில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அடுத்த மாதத்தில் இருந்து டிசம்பர் மாதத்திற்குள் 5 மாநில சட்டபேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு 5 மாநில தேர்தல் முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. 


25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கின்றனர். இது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தை எதிர்கொள்வதற்காக எதிர்க்கட்சிகள் அமைத்த முக்கிய வியூகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் தங்கள் பிரதமர் வேட்பாளர் மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், சட்டசபை தேர்தலில் பெரும்பாலான கட்சிகள் தனித்து போட்டியிடுவதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என தெரிகிறது.


5 மாநிலம் ஒரு பார்வை: 


மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளன, 2018 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களைக் கைப்பற்றியது, அதே நேரத்தில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி வெறும் 109 இடங்களைப் பெற்றது. இருப்பினும், காங்கிரஸால் அதன் ஆட்சி மற்றும் அதிகாரத்தை அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. காங்கிரஸை சேர்ந்த முதலமைச்சர் கமல்நாத், 15 மாதங்களுக்குப் பிறகு ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து, பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான சிவராஜ் சிங் சவுகான் முதலமைச்சராக பொறுப்பேற்று ஆட்சி செய்து வருகிறார். 


மிசோரம் சட்டப் பேரவையின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. வடகிழக்கு மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி செய்கிறது.


தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் சட்டப் பேரவைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தனித்தனி நாட்களில் முடிவடைகிறது.


தெலுங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) ஆட்சி செய்து வரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.