Electoral Bonds: தேர்தல் பத்திரம் தொடர்பான புது தகவல்கலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திற்கு சீல் செய்யப்பட்ட கவரில் சமர்பிக்கப்பட்ட தகவல்களை தங்கள் இணையதளத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.


பகீர் கிளப்பும் தகவல்கள்:


உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் பத்திர தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட நன்கொடை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வண்ணம் உள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் 22 நிறுவனங்கள் 100 கோடி ரூபாய்க்கு நன்கொடை வழங்கி இருக்கிறது.


தேர்தல் பத்திரம் மூலம் பாஜகதான் அதிக அளவில் நன்கொடை பெற்றுள்ளது. 6,000 கோடி ரூபாய்க்கு மேல் அக்கட்சிக்கு நன்கொடை கிடைத்துள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட மொத்த நன்கொடையில் 47.5 சதவிகிதம் பாஜகவுக்கு சென்றுள்ளது.


இந்த நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான புதிய தகவல்களை இந்திய தேரத்ல ஆணையம் வெளியிட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பான தகவல்களை சீல் செய்யப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்திற்கு தேர்தல் ஆணையம் சமர்பித்தது.


திமுகவுக்கு கோடிக்கணக்கில் வழங்கிய சாண்டியாகோ மார்ட்டின்: 


இந்த தரவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்திடம் அந்த தரவுகள் சமர்பிக்கப்பட்டுவிட்டதாகவும் அதன் நகல்கள் தங்களிடம் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளை தங்களிடம் திருப்பி தர தேர்தல் ஆணையம் கோரியது.


இதையடுத்து, அந்த தரவுகள் தேர்தல் ஆணையத்திடம் வழங்கப்பட்டது. இச்சூழலில், அந்த தரவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், திமுகவுக்கு லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் 509 கோடி ரூபாய் வழங்கி இருப்பது தெரிய வந்துள்ளது.


தேர்தல் பத்திரம் மூலம் திமுகவுக்கு 656.5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அதில், சாண்டியாகோ மார்ட்டினின் பியூச்சர் கேமிங் நிறுவனம் மட்டும் 509 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் அதிக நன்கொடை வழங்கியவர்களின் பட்டியலில் பியூச்சர் கேமிங் நிறுவனம்தான் முதல் இடத்தில் உள்ளது.


தேர்தல் பத்திரம் மூலம் பியூச்சர் கேமிங் நிறுவனம் மொத்தமாக 1,368 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. அதில், 37 சதவிகித தொகை திமுகவுக்கு சென்றுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் அதிமுகவுக்கு 6.5 கோடி ரூபாய் நன்கொடை கிடைத்துள்ளது. அதில், சிஎஸ்கே அணி மட்டும் 5 கோடி ரூபாய் நன்கொடை வழங்கி உள்ளது.


 






தேர்தல் பத்திரம் மூலம் தங்களுக்கு யார் நன்கொடை அளித்தார்கள் என்ற தகவலை தேர்தல் ஆணையத்திடம் திமுகவும் அதிமுகவும் சமர்பித்துள்ளது. ஆனால், தங்களுக்கு யார் நன்கொடை அளித்தார்கள் என்பது குறித்த தகவலை பாஜக வெளியிடவில்லை.