மாநிலங்களவையில் காலியாக உள்ள ஆறு இடங்களைப் பூர்த்தி செய்வதற்கான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

தமிழ்நாடு, அசாம், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களுக்கான  தேர்தல்கள் வரும் அக்டோபர் நான்காம் தேதி நடத்தப்படும் என்று தெரிவித்தது. 

தேர்தல்கள் நியாயமாகவும் நல்ல முறையிலும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக தேர்தல் நோக்கர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் முறை கண்காணிக்கப்படுவதற்காக போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளின் போது கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக மாநிலங்கள், மூத்த அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாநிலங்களில் தலைமைத் தேர்தல் அதிகாரிகளை தேர்தல் நோக்கர்களாக ஆணையம் நியமித்துள்ளது.

 

அறிவிப்பு வெளியிடப்படும் நாள்

15 செப்டெம்பர், 2021 (புதன்கிழமை)

மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள்

22 செப்டெம்பர், 2021 (புதன்கிழமை)

 

பரிசீலனை

23 செப்டம்பர், 2021 (வியாழக்கிழமை )

 

மனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள்

27 செப்டம்பர், 2021 (திங்கட்கிழமை)

 

தேர்தல் நாள்

4 அக்டோபர், 2021 (திங்கட்கிழமை)

 

தேர்தல் நேரம்

காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை

 

வாக்குகள் எண்ணப்படும் நாள்

4 அக்டோபர், 2021 (திங்கட்கிழமை) மாலை 05:00 மணிக்கு

 

தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டிய தேதி

6 அக்டோபர், 2021 (புதன்கிழமை)  

 

தமிழ்நாட்டில் அதிமுகவை சேர்ந்த கே.பி.முனுசாமி,  வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த நிலையில், 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட கே.பி.முனுசாமி வெற்றி பெற்றார். அதேபோன்று, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் போட்யிட்ட வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, எந்தவொருவரும் நாடாளுமன்றம், ஒரு மாநில சட்டப்பேரவை ஆகிய இரண்டிலும் இருத்தல் கூடாது. இதன் காரணமாக, இவ்விருவரும் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இருவரும் சட்டப்பேரவை உறுப்பினர்களாக செயல்படுவர்.

இவர்கள் இருவரும் தத்தம் பதவியை ராஜினாமா செய்வதால், மாநிலங்களவையில் அந்த இடத்தையும் திமுகவே பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.