இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே, உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர்.


லடாக்கில் நிலநடுக்கம்:


இதேபோல, கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது. நேபாளத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியிருந்தது.


இந்த நிலையில், லடாக் பகுதியில் இன்று மாலை 3.48 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. லடாக் உள்ளிட்ட பகுதியில் ஒரு மணி நேரத்தில் நான்கு முறை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில், லடாக்கின் கார்கில் பகுதியில் 5.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 






இதேபோல, லடாக்கில் மற்றொரு பகுதியில் 3.8 ரிக்டர் அளவுகோலில் இரண்டாவது முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், மூன்றாவது நிலநடுக்கம், ஜம்மு காஷ்மீர் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. 4.8 ரிக்டர் அளவுகோலில் ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.  அடுத்த சில நிமிடங்களிலேயே  ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 






இந்த நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக எந்தவித தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை. இருப்பினும் ஒரு மணி நேரத்தில் நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.