குடிபோதையில் கார் ஓட்டுநர் ஒருவர் தன்னை வலுக்கட்டாயமாக தாக்க முயன்றதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் அதிர்ச்சிகர தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.


டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அருகே இன்று அதிகாலையில் ரியாலிட்டி சோதனைக்கக டெல்லி தெருக்களில் ஸ்வாதி மாலிவால் வெளியே வந்து கொண்டிருந்தார். அப்போது சரியாக அதிகாலை 3.11 மணியளவில் 47 வயதான ஹரிஷ் சந்திரா என்ற நபர் தனது பலேனோ காரில் வந்து ஸ்வாதி மாலிவாலை காரில் உட்காரும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது ஸ்வாதி முடியாது என்று மறுத்துள்ளார். 


இதனால், அந்த நபர் தனது காரை எடுத்துக்கொண்டு ஸ்வாதிக்கு கடந்து வேகமாக சென்றுள்ளார். திடீரென காரை நிறுத்திய அந்த நபர் யூ-டர்ன் போட்டு ஸ்வாதி மாலிவால் அருகே வந்துள்ளார். தொடர்ந்து, அந்த நபர், ஸ்வாதியிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்தபோது, ஸ்வாதி அவனை பிடிக்க காரின் ஜன்னல் வழியே கையை உள்ளே விட்டுள்ளார். அப்போது, அந்த நபர் காரின் கண்ணாடியை மூடியதால் ஸ்வாதியின் கை சிக்கிகொண்டது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அந்த நபர் காரை ஆன் செய்து ஓட்டி சென்றுள்ளார். சுமார் 10 முதல் 15 தூரம் ஸ்வாதியை இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. ஸ்வாதியின் டீம் அவர்களுக்காக இங்கிருந்து சிறிது தூரத்தில் காத்திருந்த இந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்வாதி கொடுத்த புகாரின் பேரில், 47 வயதான ஹரிஷ் சந்திராவை காவல்துறையினர் கைது செய்தனர். 






காவல் துறையினரின் கூற்றுப்படி, காவல்துறை ரோந்து வாகனம் இன்று அதிகாலை 3.05 மணிக்கு எய்ம்ஸ் கேட் எண் 2 முன் நடைபாதையில் ஒரு பெண் இருந்ததை கண்டோம். விசாரணையில், காரில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டதாக அந்த பெண் கூறினார். குடிபோதையில் பலேனோ கார் டிரைவர் தன் அருகில் நின்றதாகவும், அந்த பெண்ணை கெட்ட எண்ணத்துடன் காரில் உட்காரச் சொன்னதாகவும் அந்த பெண் கூறினார். பெண் மறுத்ததால், சர்வீஸ் லேனில் இருந்து யு-டர்ன் எடுத்துவிட்டு திரும்பி வந்தார். டிரைவர் மீண்டும் அந்தப் பெண்ணை காரில் உட்காரச் சொன்னார். அந்தப் பெண் அவரைக் கண்டித்துள்ளார். அவள் டிரைவரின் பக்க ஜன்னல் அருகே சென்றதும், கார் டிரைவர் வேகமாக ஜன்னல் கண்ணாடியை சுருட்டினான். பெண்ணின் கை காரில் சிக்கி 10-15 மீட்டர் வரை இழுத்துச் செல்லப்பட்டது.” என தெரிவித்தனர். இறுதியில்தான் அந்த பெண் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் என தெரியவந்தது என குறிப்பிட்டனர். 


டெல்லியில் நடந்த மற்றொரு சம்பவம்:


கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது டெல்லியில்  20 வயது பெண் ஒருவர் தனது ஸ்கூட்டியை கார் மீது மோதியதில் 12 கிலோமீட்டர் தூரம் வாகனத்தின் அடியில் இழுத்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார். மாருதி சுசுகி பலேனோ காரில் ஐந்து பேர் இருந்ததாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் கிரெடிட் கார்டு சேகரிப்பு முகவர், ஓட்டுநர் மற்றும் ரேஷன் கடை உரிமையாளர் ஆகியோர் அடங்குவர் என காவல்துறை  தெரிவித்திருந்தனர். 


டெல்லி சுல்தான்புரியில் நள்ளிரவில் காரில் மோதி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதில் அஞ்சலி (20) என்ற இளம்பெண் உயிரிழந்தார். அவரது ஸ்கூட்டியில் மோதிய பிறகு, கார் 10-12 கிமீ தூரம் சென்றது, காரின் அடிப்பகுதியில் அவரது கைகால்கள் சிக்கிக்கொண்டன என்று போலீசார் தெரிவித்தனர்.


அந்தப் பெண்ணின் தாயார் ரேகா, தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என கூறினார். "அவளுடைய ஆடைகளை முழுவதுமாக கிழிக்கப்பட்டு இருந்திருக்கிறது. அவர்கள் அவளைக் கண்டுபிடிக்கும் போது அவளது உடல் முழுவதும் நிர்வாணமாக இருந்தது. எனக்கு முழு விசாரணையும் நீதியும் வேண்டும்," என்று அவர் கூறினார்.