கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பழைய மூணாறில், பெண் நாய் ஒன்று சுற்றி வந்துள்ளது. கர்ப்பிணியாக இருந்த இந்த நாயின் கழுத்தில் எப்படியோ கம்பி சிக்கியுள்ளது. இந்த கம்பியில் இருந்து நாய் தப்பிக்க முயற்சித்தபோது, அது இன்னும் இறுக்கமாக நாயின் கழுத்தை சுற்றிக்கொண்டது.




கழுத்தில் கம்பியுடன் கர்ப்பிணியாக சுற்றித்திரிந்த நாய், கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 குட்டிகளை ஈன்றது. கழுத்தை மிகவும் கம்பி சுற்றியிருப்பதால், நாயால் சரியாக உணவு உண்ண முடியவில்லை. இதைப்பார்த்து பரிதாபப்பட்டு நாயின் கழுத்தை இறுக்கியுள்ள கம்பியை அகற்ற முயற்சித்து, யாரேனும் அருகில் சென்றால் நாய் அவர்களை குரைத்து விரட்டுகிறது.


இதனால், இந்த நாயைப் பற்றி தீயணைப்பு மீட்புத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்களும் நாயை நெருங்க முயற்சி செய்தால், குட்டியுடன் இருக்கும் தாய் நாய் அருகில் விடவில்லை. இதனால், நாய்க்கு மயக்க மருந்து செலுத்தி பின்னர் அதன் கழுத்தில் இருக்கும் கம்பியை அகற்ற தீயணைப்புத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.




கழுத்தில் கம்பி, 5 குட்டிகளுடன் தானும் உணவு உண்ண முடியாமல், சரியான உணவு உண்ணாததால் குட்டிகளுக்கும் பால் கொடுக்க இயலாமல் தவிக்கும் இந்த நாயைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். நாயின் இந்த பரிதாப நிலையை சிலர் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட பலரும் நாயின் கழுத்தில் உள்ள கம்பியை உடனே அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.