பெண் குழந்தைகளின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வகை செய்யும் குழந்தைத் திருமணத் தடை சட்ட திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி அறிமுகம் செய்தார். 


பெண்ணின் குறைந்தபட்ச திருமண வயதை 18-லிருந்து 21 ஆக மாற்றுவது குறித்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜெயா ஜேட்லி தலைமையிலான குழுவின் பரிந்துரையை ஏற்று, மத்திய அமைச்சரவை இந்த ஒப்புதலை அளித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, குறைந்தபட்சத் திருமண வயதை மாற்றியமைப்பது குறித்த பரிந்துரையை வழங்கியுள்ளது.


குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின்படி குறைந்தபட்ச வயதை எட்டாதவர்களுக்குச் செய்துவைக்கும் திருமணங்கள் சட்டவிரோதமானது. அவற்றை நடத்துபவர்கள் தண்டிக்கத் தக்கவர்கள். எனினும், அத்திருமணங்கள் செல்லத் தகாதவை அல்ல. குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட்டவர்கள் குறைந்தபட்சத் திருமண வயதை எட்டும்போது, திருமண உறவைத் தொடர்வது குறித்து முடிவெடுக்கும் உரிமை பெற்றவர்கள் என்றும் இந்த மசோதா கூறுகிறது. எனினும், குழந்தைகளின் விருப்பத்துக்கு மாறான திருமணம் என்று நீதிமன்றம் கருதும்பட்சத்தில், குறைந்தபட்சத் திருமண வயதை எட்டும் வரையில் குழந்தைகளைப் பாதுகாப்பு இல்லங்களில் தங்கவைக்கவும் உத்தரவிடலாம் என்றும் கூறுகிறது.






இந்நிலையில், திருமணத் தடை சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து மக்களவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி ரானி இன்று அறிமுகப்படுத்தினார்.


அப்போது திமுக எம்.பி கனிமொழி, AIMIM எம்.பி., அசாதுதீன் ஒவைசி, தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


இதுகுறித்து பேசிய கனிமொழி எம்.பி, “பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவைத் தவிர, யாரையும் கலந்தாலோசிப்பதில் அரசுக்கு நம்பிக்கை இல்லை. சட்டத்தில் மாற்றம் செய்ய முயலும் அரசு அதற்கு முன்பாக விரிவான விவாதம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால் நடைபெறவில்லை. மசோதாவை நிலைக்குழு அல்லது தேர்வுக் குழுவுக்கு அனுப்புவது மிகவும் முக்கியம். அவர்கள் அதை மறுபரிசீலனை செய்து, பொது சமூகத்தின் கருத்துகளைக் கேட்டு, பின்னர் மசோதாவைக் கொண்டு வர வேண்டும்” எனத் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே பேசுகையில் ‘‘இது தொடர்ந்து 3-வது முறையாக நடைபெறுகிறது. மசோதா குறித்து யாருடனும் விவாதம் நடத்தாமல் கொண்டு வரப்படுகிறது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் யாரிடமும் ஆலோசனை பெறவில்லை. நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் குறித்து முடிவு செய்யும்போது இதனை தெரிவிப்பதில்லை. மாறாக இந்த அரசு திடீரென மசோதவை கொண்டு வருகிறது. மத்திய அரசு செய்யும் இந்த புதிய நடைமுறையை நான் கண்டிக்க விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். 




ஸ்மிருதி ரானி மசோதாவை அறிமுகம் செய்தபிறகு பேசிய AIMIM எம்.பி., அசாதுதீன் ஒவைசி ”மிகவும் பிற்போக்குத்தனமான திருத்தம் என சாடினார். இதுகுறித்து பேசுகையில், “பிற்போக்கான திருத்தம். இது 19-வது பிரிவின் கீழ் சுதந்திரத்திற்கான உரிமைக்கு எதிரானது. 18 வயதான இளைஞர்கள் பிரதமரை தேர்தெடுக்கலாம். லிவிங் உறவில் ஈடுபடலாம். ஆனால் திருமண உரிமையை மட்டும் நீங்கள் மறுக்கிறீர்கள். 18 வயதினருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? சோமாலியாவை விட இந்தியாவில் பெண் உழைப்பு சக்தி குறைவாகத்தான் உள்ளது” எனத் தெரிவித்தார்.