ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி பேரவையில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் வெளிநடப்பு  செய்தனர்.  புதுச்சேரி பேரவையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திமுக காங்கிரஸ் வெளிநடப்பு செய்தனர்.


2019 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி என்ற குடும்ப பெயர் பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்து 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பின்னர் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. கர்நாடகாவின் கோலாரில் நடந்த பிரசாரத்தில் சர்ச்சையாக பேசிய புகாரில் ராகுலுக்கு எதிராக சூரத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.


இதனையடுத்து கிரிமினல் அவதூறு வழக்கில் குஜராத்தின் சூரத்தில் உள்ள நீதிமன்றத்தால் காங்கிரஸ் எம்பி தண்டிக்கப்பட்டதையடுத்து, ராகுல் காந்தி தனது நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்துள்ளதாக பிரபல வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் கூறினார். 


 இந்த தீர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்த வழக்கை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது இல்லத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். 


தகுதி நீக்க விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து  ராகுல்காந்தி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் எந்த உறுப்பினராலும் அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை கூற முடியவில்லை. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதன் எதிரொலியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.


மேலும் “அதானி விவகாரத்தில் பிரதமர் என்னுடைய பேச்சை கண்டு அஞ்சுகிறார். அதனால்தான், என் மீது இந்த தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்படுள்ளது. பிரதமரின் அச்சத்தை திசைத்திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நான் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளேன்; கைது செய்யப்பட்டாலும், என் பணி தொடரும். ஜனநாயகத்திற்கான என் குரல் தொடர்ந்து ஒலிக்கும்; அதை யாராலும் ஒடுக்க முடியாது. இந்த நாடு எனக்கு அனைத்தையும் வழங்கியிருக்கிறது. மக்களுக்காக, நாட்டிற்காக தொடர்ந்து போராடுவேன்” என கூறியுள்ளார். 


ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அவைகள் கூடியதும் சில நொடிகளிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதில் மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.