பெங்களூருவில் உள்ள சட்டப்பேரவை வளாகத்திற்கு சைக்கிளில் வந்த கர்நாடக துணை முதல்வர் டி. கே. சிவகுமார், இறங்கும்போது தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சைக்கிளில் இருந்து கீழே இறங்கும்போது அவர் தவறி விழுவதை பார்த்த அதிகார்கள், பதறிபோய் அவரை தாங்கி பிடித்தனர். 

ரஜினி ரேஞ்சாக சைக்கிளில் வந்த டி கே சிவகுமார்:

கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி. கே. சிவகுமார். அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உள்ளார். கர்நாடகாவின் செல்வாக்கு மிக்க தலைவரான இவர், காங்கிரஸ் கட்சியில் எந்த பிரச்னை வந்தாலும் இவர்தான் முதலில் களத்தில் இறக்கப்படுவார். சோனியா காந்தி, ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவராக உள்ளார். 

இந்த நிலையில், கர்நாடக மாநில சட்டமன்ற வளாகத்திற்கு அண்ணாமலை ரஜினி போல் சைக்கிளில் வந்த டி. கே. சிவகுமார், சமநிலையை இழந்து கீழே விழுந்துள்ளார். அருகிலுள்ள அதிகாரிகள், அவரை தாங்கி பிடிக்க விரைந்தனர். இந்த சம்பவம் கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பலர் இந்த வீடியோவைப் பகிர்ந்து,  கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். 

கீழே இறங்கும்போது தவறி விழுந்ததால் பரபர:

முன்னதாக, சட்டமன்றத்திற்கு சைக்கிளில் வருவது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட டி. கே. சிவகுமார், "அதிகார மையத்தில் நான் சைக்கிளை தேர்ந்தெடுத்தேன். ஏனென்றால், முன்னேற்றத்திற்கு எப்போதும் அதிகாரம் தேவைப்படுவதில்லை. மக்கள் சக்தி மட்டுமே தேவை" என குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூருவின் தெருக்களில் சைக்கிள் ஓட்டும்போது துணை முதல்வர் லூயிஸ் உய்ட்டன் ஸ்டோலை அணிந்திருப்பதையும் காண முடிந்தது. இதை கவனித்த நெட்டிசன்கள், பல்வேறு விதமான நகைப்புக்குரிய கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

 

"சார், நீங்கள் சைக்கிள் ஓட்டும்போது கூட எல்வி சால்வையை அணிய வேண்டிய தேவையில்லை" என நெட்டிசன் ஒருவர் கலாய்த்துள்ளார். மற்றொருவர், "அவரிடம் நிறைய எல்வி சால்வைகள் இருக்கும்போல் தெரிகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.