தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
Continues below advertisement
பிரதமர் மோடி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 20, 2025) நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். சமூக ஊடக வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி, "எனது அனைத்து நாட்டு மக்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். இந்த புனித தீபத் திருநாள் அனைவரின் வாழ்க்கையையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தால் ஒளிரச் செய்யட்டும்" என்று பதிவிட்டார்.
Continues below advertisement
எடப்பாடி பழனிச்சாமி:
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த இனிய திருநாளில் நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும்; துன்பங்கள் கரைந்து, ஒளிமயமான எதிர்காலம் பிறக்கட்டும்; வேற்றுமை அகன்று, ஒற்றுமை ஓங்கட்டும்; அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்
அன்புமணி ராமதாஸ்:
இருள் இன்றுடன் விலகட்டும், மகிழ்ச்சி ஒளி எந்நாளும் பரவட்டும்! இருளை விலக்கி, ஒளி கொடுக்க வரும் தீபஒளித் திருநாளை தமிழ்நாட்டிலும், உலகின் பிற பகுதிகளிலும் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளமார்ந்த தீப ஒளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.!
மத்திய அமைச்சர் எல்.முருகன்:
தேசம் முழுவதும் அனைத்து மக்களாலும் கொண்டாடப்படுகின்ற தீப ஒளித் திருநாளான தீபாவளிப் பண்டிகை நல்வாழ்த்துகளை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பகவான் ஶ்ரீ கிருஷ்ணபிரான் நரகாசுரனை வீழ்த்தி தர்மத்தை நிலைநாட்டிய இத்தினத்தில், அனைவரது வாழ்விலும் துன்பம் அகன்று இன்பமான சூழல் ஒளி பெறட்டும். நல்ல ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் மகிழ்வும் பெற்று நலமுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதோடு, பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடித்து கொண்டாட அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.
ஆளுநர் ஆர்.என் ரவி:
தீபாவளி பண்டிகை சுபதினத்தில், தமிழ்நாட்டின் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். இருள் மீது ஒளியின் வெற்றியையும், தீமை மீது நன்மையின் வெற்றியையும், அறியாமை மீது ஞானத்தின் வெற்றியையும் தீபாவளி கொண்டாட்டம் குறிக்கிறது. இந்நாளில் அன்னை லக்ஷ்மி நமக்கு மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் வளத்தை நல்கி, நமது வாழ்க்கையை அன்பு மற்றும் கருணை குணத்தால் நிரப்பி, அமைதி மற்றும் ஒற்றுமையில் வேரூன்றிய ஒரு இணக்கமான சமூகத்தை நாம் வளர்க்க அருள்புரியட்டும்! அனைவருக்கும் மகிழ்ச்சியான, துடிப்பான மற்றும் பாதுகாப்பான தீபாவளி வாழ்த்துக்கள்!