Diwali 2022:  லடாக் கார்கிலில் ராணுவ வீரர்களுடன், தீபாவளியை  பிரதமர்  நரேந்திர மோடி உற்சாகமாக கொண்டாடினார்.


கொரோனா பரவல், ஊரடங்கு என கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இந்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்நிலையில் நமது நாட்டு மக்களுக்கு  பாதுகாப்பு தரும் ராணுவ வீரர்கள் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினர். எல்லையில் இந்திய வீரர்களுக்கு, வங்கதேச வீரர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினர்.


மேலும், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக பிரதமர் மோடி கொண்டிருக்கிறார்.  2014ம் ஆண்டு சியாச்சியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை  பிரதமர்  மோடி கொண்டாட தொடங்கினார். 


2015ஆம் ஆண்டு பஞ்சாப் எல்லையிலும், 2016-ம் ஆண்டு இமாச்சலபிரதேச எல்லையிலும் பணியாற்றிய ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். 2017-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பணிபுரியும் வீரர்களுடனும், 2018-ம் ஆண்டு உத்தரகாண்டில் பணியாற்றும் வீரர்களுடனும், 2019-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றும் வீரர்களுடனும் தீபாவளியை கொண்டாடினார். 2020-ம் ஆண்டு ராஜஸ்தான் எல்லையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் தீபாவளியை கொண்டாடினார்.






இந்நிலையில், இந்த ஆண்டு கார்கிலில் இருக்கக் கூடிய எல்லை பாதுகாப்புப்படை வீரர்களுடன் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினார். அப்போது ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் அனைவரும் என்னுடைய குடும்பம் எனவும், உங்கள் மத்தியில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது பெருமைக்குரியது என தெரிவித்தார்.  மேலும், இந்தியா என்பது நாடு மட்டுமல்ல, தியாகம், அன்பு, இரக்கம், மகத்தான திறமை, தைரியம் உள்ளிட்டவற்றை கலந்து தான் இந்தியா உருவாகியுள்ளது என தெரிவித்தார்.


அதேபோன்று, கார்கில் பகுதியில் எதிரிகளுக்கு நமது ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுவே நமது ராணுவ வீரர்களின் பெருமைக்கு கிடைத்த சாட்சியாக பார்கிறேன் என தெரிவித்தார். கார்கில் போரை ஒருமுறை நேரில் பார்வையிடுவதற்காக வாய்ப்பு தனக்கு கிடைத்தாக ராணுவ வீரர்களிடம் தெரிவித்தார். ஒரு நாட்டின் துணிச்சலான வீரர்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்தால் அந்த நாடு ஒருபோதும் அழியாது என்று தெரிவித்தார். நாட்டிற்கு இமைய மலைப்போல் உள்ள ராணுவ வீரர்கள் இருக்கும்போது நமது நாடு எப்பொழுதும் பெருமைக் கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.