"ஜெய் ஸ்ரீ ராம்" என்ற வார்த்தைகள் அடங்கிய பாடலுக்கு பர்தா அணிந்த மாணவிகள் குழு நடனமாடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


வைரலான வீடியோவின் உண்மைத்தன்மை


அவர்களுடன் சிவப்பு நிற புடவையில் ஒரு பெண் நடனமாடுவதையும் காணமுடிகிறது. வீடியோ, "உங்கள் நடன ஆசிரியர் இந்துவாக இருக்கும்போது," என்று எழுதப்பட்டு வெளியிடப்பட்டது. சர்ச்சைக்குரிய இந்த வீடியோ பல விவாதங்களை கிளப்பி இருந்தது. ஆனால் வீடியோவில் உள்ள பெண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" பாடலுக்குதான் நடனமாடினார்களா என்ற கேள்விக்கு, இந்தியா டுடே நடத்திய விசாரணையில் பதில் தெரிந்துள்ளது. அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வேறு ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் அந்த குழுவின் வீடியோவில் ஜெய் ஸ்ரீ ராம் பாடல் சேர்க்கப்பட்டுள்ளது. Google இல் வீடியோவின் கீஃப்ரேம்களின் படத் தேடலை இயக்கி இதே வீடியோவின் பல்வேறு பதிவேற்றங்களைக் கண்டறிந்து, உண்மையான பாடல் எது என்று கண்டறியப்பட்டது.



வேறு ஒரு பெங்காலி பாடல்


இந்த வீடியோவோடு வந்த பதிவேற்றங்கள் அனைத்திலும், பின்னணியில் ஒரு பெங்காலி பாடல் ஓடுகிறது என்று இந்தியா டுடே தரவுகள் குறிப்பிடுகின்றன. அதுமட்டுமின்றி பள்ளி போன்ற கட்டிடத்தின் சுவர்களில் பெங்காலி மொழியில் ஏதோ எழுதப்பட்டிருப்பதைக் கவனிக்க முடிந்தது. கூகுள் லென்ஸின் மொழிபெயர்ப்புக் கருவியைப் பயன்படுத்தி சரிபார்க்கையில், "மதாரிபூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி" என்று இருப்பது தெரிகிறது. டாக்கா பிரிவின் ஒரு பகுதியான மதரிபூர், மத்திய வங்காளதேசத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். கூகுள் மேப்ஸில் பள்ளியைக் கண்டறிந்து, இந்த லொகேஷனில் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் காணப்படும் அதே எழுத்துக்கள் வைரல் வீடியோவில் உள்ள பள்ளிச் சுவர்களில் காணமுடிந்தது. 


தொடர்புடைய செய்திகள்: UPI Transaction : வருகிறது ஆப்பு: திணறவைக்கும் டிஜிட்டல் இந்தியா: ஏப்ரல் 1 முதல் பணப் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்...


முதன்முதலில் பதிவிட்டவர்


இவற்றில் பில்லால் ஹொசைன் சாகோர் என்பவரின் ஃபேஸ்புக் பதிவின் ஸ்கிரீன் கிராப்பும் இருந்தது. பில்லாலின் ப்ரொஃபைலை ஃபேஸ்புக்கில் தேடியபோது, அவரது டைம்லைனில் வைரலான வீடியோ இருந்தது. இது மார்ச் 1, 2023 அன்று அவரால் பகிரப்பட்டது. இந்த வீடியோ 5,50,000 க்கும் அதிகமான லைக்ஸ்களையும், 44,000 கமெண்ட்களையும் பத்து மில்லியன் வியூஸ்களையும் பெற்றுள்ளது. இதுவே வெளியான ஒரிஜினல் வீடியோ. அதில் ஒலிக்கும் பாடல் பெரும்பாலான வீடியோ க்களில் ஓடிய அதே பெங்காலி பாடல்கள் தான். அந்த பாடல் "அமர் மோன்டா ஜெ அஜ் எலோமெலோ" என்று தொடங்கும் பாடல் என்பது கண்டறிப்பட்டது.






பெண்கள் பள்ளியின் விளையாட்டு விழா


பில்லால் வைரலான வீடியோவைப் பதிவேற்றிய அதே நேரத்தில் பிப்ரவரி 27, 2023 அன்று பதிவேற்றப்பட்ட மதரிபூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் மற்ற வீடியோக்கள் யூடியூப்பில் கிடைத்தன. வீடியோவில், சில பெண்கள் தங்கள் கைகளில் வங்காளதேசத்தின் தேசியக் கொடியுடன் நடனமாடுவதைக் காணமுடிகிறது. பெண்கள் அதே சிவப்பு மற்றும் பச்சை நிற புடவை அணிந்திருப்பது வைரல் வீடியோக்களில் தெரிகிறது. இந்த வீடியோக்களிலேயே மதரிப்பூர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியின் விளையாட்டு விழா என்பது தெரிகிறது. இதற்கு மேல் அதிலிருந்து தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் வீடியோவில் ஓடிய பாடல் 'ஜெய் ஸ்ரீ ராம்' இல்லை என்பது உறுதியாகிறது. அந்த வீடியோ இந்தியாவிலேயே எடுக்கப்பட்டதில்லை என்பதும் உறுதியாகிறது.