தர்மா கார்டியன் எனப்படும் இந்தியா-ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சியின் 6-வது பதிப்பில் பங்கேற்பதற்காக இந்திய ராணுவக் குழுவினர் இன்று (22.02.2025) ஜப்பானுக்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்த ராணுவ பயிற்சி வரும் 24ஆம் தேதி முதல் மார்ச் 9ஆம் தேதி வரை ஜப்பானின் கிழக்கு புஜி பகுதியில் நடைபெறவுள்ளது.


ஜப்பானுடன் கைகோர்க்கும் இந்தியா:


தர்மா கார்டியன் பயிற்சி என்பது இந்தியாவிலும் ஜப்பானிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு நிகழ்வாகும். இந்தப் பயிற்சியின் முந்தைய பதிப்பு ராஜஸ்தானில் கடந்தாண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடத்தப்பட்டது.


120 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் மெட்ராஸ் ரெஜிமெண்ட் பிரிவைச் சேர்ந்த வீரர்களும், பிற ஆயுதப் படைப் பிரிவுகளைச் சேர்ந்த வீரர்களும் உள்ளனர்.


இந்த பயிற்சி, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு, கூட்டு திட்டமிடல், கூட்டு உத்திசார் பயிற்சிகளில் கவனம் செலுத்தும். இது செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்தவும், போர் திறன்களை வலுப்படுத்தவும் உதவும்.


கூட்டு ராணுவப் பயிற்சி:


கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஜப்பானுக்கு ராணுவத் தலைமைத் தளபதியின் பயணம் மேற்கொண்டார். இந்த நிலையில், இந்த ஆண்டு தர்மா கார்டியன் பயிற்சி, இந்தியா - ஜப்பான் இடையேயான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 






பிராந்திய பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவை குறித்த இந்தியா - ஜப்பான் இடையேயான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இந்த பயிற்சி எடுத்துக் காட்டுகிறது. சுதந்திரமான, திறந்த, உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் என்ற பொதுவான பார்வையையும் இது முன்னெடுத்துச் செல்கிறது. 


இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்பு, நம்பிக்கை, கலாச்சார இணைப்புகளின் நீடித்த பிணைப்புக்கு ஒரு சான்றாக, இந்த பயிற்சி உள்ளது.


இதையும் படிக்க: ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?