பெரும் அதிர்ச்சி! ஸ்டைலாக முடிவெட்ட ஆசைப்பட்ட 9 வயது சிறுவன் தற்கொலை - என்ன நடந்தது?
தெலங்கானாவில் ஸ்டைலாக முடிவெட்ட ஆசைப்பட்ட சிறுவன், தந்தை மறுப்பு தெரிவித்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் சமீபகாலமாக சிறு, சிறு விஷயங்களுக்காக தற்கொலை செய்து கொள்ளும் விவகாரங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தெலங்கானாவில் அரங்கேறிய சம்பவம் ஒன்று மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
ஸ்டைலாக முடிவெட்ட ஆசை:
தெலங்கானாவில் அமைந்துள்ளது மௌபுதபாத் மாவட்டம். இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள கங்காரம் மண்டல் பகுதியில் உள்ள சிந்தகுடெம் கிராமத்தில் வசித்து வருபவர் காந்தாராவ். இவரது மகன் ஹர்ஷவர்தன். 9 வயதான இந்த சிறுவன் அங்குள்ள பள்ளி ஒன்றில் 6ம் வகுப்பு படித்து வருகிறான்.
தற்போது கோடைக்கால பள்ளி விடுமுறை என்பதால், வீட்டில் இருந்து வந்தான். பள்ளி விரைவில் தொடங்க உள்ள நிலையில், முடி திருத்தம் செய்ய தந்தை கூறியுள்ளார். ஆனால், மிகவும் மாடர்னாக ஸ்டைலாக முடி வெட்டிக் கொள்ள ஹர்ஷவர்தன் ஆசைப்பட்டுள்ளான். இதை தனது தந்தை காந்தாராவிடம் கூறியுள்ளான். ஆனால், காந்தாராவோ பள்ளி செல்லும் மாணவர் முறையாக முடிவெட்டிச் செல்ல வேண்டும் என்று கூறி, மாடர்னாக முடிவெட்ட மறுப்பு தெரிவித்துவிட்டார்.
சிறுவன் தற்கொலை:
கடந்த 26ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தால் ஹர்ஷவர்தன் மனம் உடைந்துள்ளார். இதையடுத்து, வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக சிறுவன் ஹர்ஷவர்தனை கங்காராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால், அங்கு சிறுவனின் உடல்நிலையில் பெரியளவில் முன்னேற்றம் இல்லாத காரணத்தால் ஹைதரபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், நான்கு நாட்களாக சிறுவனுக்கு சிகிச்சை அளித்தும் சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாத சூழலில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
சமூக ஆர்வலர்கள் வேதனை:
இந்த விவகாரம் தொடர்பாக கங்காராம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்டைலாக முடிவெட்டக் கூடாது என்று தந்தை கூறிய ஒரே காரணத்திற்காக 9 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக பதின்ம வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள், சிறுமிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் சமூகத்திற்கு ஆரோக்கியமல்ல என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)