உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது துணை போர்க் கப்பலான ‘நிஸ்டார்’, இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் நேற்று (ஜூலை 8ஆம் தேதிஃ விசாகப்பட்டினத்தில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
உலக நாடுகளை மிரட்டும் ‘நிஸ்டார்’
இந்தப் போர்க்கப்பல் ஆழ்கடல் செயல்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடிய வகையில் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமஸ்கிருத மொழியில் ‘நிஸ்டார்’ என்ற வார்த்தைக்கு விடுதலை, மீட்பு, கருணை என்று பொருள்படும். அந்த வகையில் இந்த கப்பலுக்கு நிஸ்டார் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 10,000 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 118 மீ நீளம் கொண்டதாகவும், அதிநவீன ஆழ்கடல் நீச்சல் உபகரணங்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் பகுதியில் 300 மீ ஆழத்திற்கு சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர்க் கப்பல்:
நீர்மூழ்கிக் கப்பலில் அவசரநிலை ஏற்படும் சூழலில், அதில் உள்ள பணியாளர்களை மீட்டு பத்திரமாக வெளியேற்றும் வகையில், ஆழ்கடல் பகுதிகளில் நீரில் மூழ்கிச் செல்லக் கூடிய வகையிலும், 1000 மீ ஆழம் வரை கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்தக் கப்பல் பயன்படும்.
ஏறத்தாழ 75% உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிஸ்டார் கப்பல், இந்திய கடற்படையின் உள்நாட்டு கட்டுமானப் பணியின் முன்னேற்றத்திற்கான மற்றொரு மைல்கல்லாகும், மேலும் இது மத்திய அரசின் தற்சார்பு இந்தியா, இந்தியாவில் தயாரியுங்கள் போன்ற திட்டங்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.
இதையும் படிக்க: Avadi Bus Depot: ஆவடி மக்களுக்கு ஜாக்பட்; ரூ.36 கோடியில் நவீனமாகும் பேருந்து நிலையம், மெட்ரோ இணைப்பு - முழு விவரம்