டெல்லியை சேர்ந்த ஆசிரியை ஒருவரின் டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 


பொதுவாக கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான உறவு என்பது கடைசி காலம் வரை மறக்க முடியாத உன்னதமான உறவாகும். அன்பு காட்டுபவர்கள், அதிரடிக்காரர்கள், நண்பர்களாக பழகுபவர்கள் என விதவிதமான ஆசிரியர்களை நம் வாழ்க்கையில் பார்த்திருப்போம். அவர்களைப் பற்றி பல்வேறு இடங்களில் பல நேரங்களில் நினைவு கூறுவோம்.


இதனிடையே டெல்லியில் கோடைக்கால முகாமின் கடைசி நாளில் பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவர்களுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை அந்த ஆசிரியரான மனு குலாட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 






அதில் கோடைகால முகாமின் கடைசி நாளில் எங்களின்  மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நடனம் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் அந்த வீடியோவில் கிஸ்மத்  திரைப்படத்தின் எவர்க்ரீன் பாடலான கஜ்ரா மொஹபத் வாலா பாடல் பின்னணியில் ஒலிக்க நேர்கோட்டில் வரிசையாக நிற்கும் மாணவிகள் இருவர் நடன அசைவுகளுடன் விலக அவர்களுக்கு பின்னால் நிற்கும் ஆசிரியை மனு குலாட்டி அழகான நடன அசைவுகளை வெளிப்படுத்துகிறார். 


இந்த வீடியோவை பார்த்த பலரும் ஆசிரியை மனு குலாட்டியை வெகுவாக பாராட்டியுள்ளனர். அதில் ஒருவர், இந்த வீடியோ இன்று காலை நான் பார்த்த மிகவும் ஊக்கமளிக்கும் வீடியோ என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆசிரியர்கள் மாணவர்களை அணுகும் விதத்தில் தான் அவர்கள் மீதான அன்பும், மரியாதையும் அளவுக்கதிகமாக மாணவர்களால் வழங்கப்படும் என்பதற்கு இதுபோன்ற வீடியோக்களே நிகழ்கால சான்றுகள் என்பது குறிப்பிடத்தக்கது.