டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரங்களை குறைக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அவசர சட்டத்தை தொடர்ந்து, அதை வழக்கமான சட்டமாக மாற்ற, டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு கொண்டு வந்தது. 


இது டெல்லி அரசின் உயர் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றத்துக்கு சிபாரிசு செய்ய ஒரு ஆணையம் அமைக்கவும், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு இறுதி அதிகாரம் அளிக்கவும் வழி வகை செய்கிறது.


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு மத்தியில் நிறைவேற்றப்பட்ட மசோதா:


கடந்த 3ஆம் தேதி, இந்த மசோதா  மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அப்போது, மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சிகள் தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டது.









குடியரசு தலைவர் ஒப்புதல்:


மற்ற எதிர்க்கட்சிகளின் உதவியோடு, இந்த மசோதாவை தோற்கடிக்க டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முயற்சி மேற்கொண்டார். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், இந்த மசோதாவுக்கு எதிராக கடும் வாதங்களை எடுத்து வைத்தனர்.


இருப்பினும், ஒடிசாவை ஆளும் பிஜு ஜனதா தளம், ஆந்திராவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு, மத்திய பாஜக அரசு மசோதாவை நிறைவேற்றியது.


இந்த நிலையில், டெல்லி நிர்வாக சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து, மசோதா சட்டமாகியுள்ளது.


சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:


புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ள நிலையில், துணை நிலை ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும்  உள்ள அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. சட்டத்தின்படி, அதிகாரிகளின் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்டவற்றை முடிவு செய்ய தேசிய தலைநகர் சிவில் சேவை ஆணையம்  உருவாக்கப்பட உள்ளது.


இதில் முதலமைச்சர்,  முதன்மை செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.  மத்திய அரசால் இரு செயலாளர்களும் நியமிக்கப்படுவார்கள். ஆணையத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுக்கும் முடிவுகள் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரைகளாக அனுப்பப்படும். அவற்றை துணை ஆளுநர் நிராகரிக்கவோ, மறுபரிசீலனைக்கு அனுப்பவோ அதிகாரம் பெற்றுள்ளார்.


தனது சொந்த விருப்பத்தின் பேரில் டெல்லி சட்டப்பேரவையை கூட்டவோ, சட்டப்பேரவை நாட்களை நீடிக்கவோ துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு.