வடகிழக்கு டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித்தின் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் மீண்டும் நிராகரித்துள்ளது.


2019ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ஷாகீன் - பாக் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெகுஜன போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், பிப்ரவரி 23, 2020 அன்று, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கபில் மிசுரா, சாகீன்பாக்கில் போராட்டக்காரர்களை வெளியேற்றுமாறு டெல்லி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டார்.


மேலும், போராட்டக்கார்களுக்கு கெடு விடுத்தார். இதனையடுத்து, ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 2020 செப்டம்பர் 13ஆம் தேதி முன்னாள் ஜே.என்.யு மாணவர் உமர் காலித்தை காவல் துறையினர் கைது செய்தனர்.


வடகிழக்கு டெல்லி பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்கள், கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக உமர் காலித் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


 






இந்நிலையில், "ஜாமீன் மேல்முறையீட்டில் எந்த தகுதியையும் காணவில்லை" எனக் கூறி உமர் காலித்தின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் சித்தார்த் மிருதுல் மற்றும் ரஜ்னிஷ் பட்நாகர் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.


இதுகுறித்து முன்னதாகப் பேசியுள்ள உமர் காலித்தின் தந்தை இலியாஸ், ”இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. உமருக்கு எதிராக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை, நாங்கள் நிச்சயமாக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்” எனத்  தெரிவித்துள்ளார்.


உமர் காலித் இதுவரை மொத்தம் 700 நாள்களை சிறையில் கழித்துள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ள நிலையில் உமர் காலித்தின் மனு மட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது.


வடகிழக்கு டெல்லி பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டங்கள், கலவரங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக உமர் காலித் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.