டெல்லியில் நடந்த கொலை வழக்கு நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவை அவரது காதலன் ஆப்தாப் கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்த சம்பவம் மனதை பதற வைத்தது.


இந்த சம்பவம் தொடர்பாக, நாளுக்கு நாள் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், இந்த கொலை வழக்கு தொடர்பாக டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. அதில், பல அறிந்திராத தகவல்களை காவல்துறை வெளிகொண்டு வந்துள்ளது.


ஷ்ரத்தா அவரது நண்பரை பார்த்து விட்டு வந்ததால், கோபத்தில் இருந்த ஆப்தாப் அவரை கொலை செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொலை வழக்கில், 6,629 பக்க குற்றப்பத்திரிகையை டெல்லி காவல்துறை சாகேத் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. இதைதொடர்ந்து, ஆப்தாப்பின் நீதிமன்ற காவலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதுகுறித்து காவல்துறை இணை ஆணையர் (தெற்கு) மீனு சவுத்ரி பேசுகையில், "சம்பவத்தன்று, ஷ்ரத்தா தனது தோழி ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தார். இது ஆப்தாப்புக்கு பிடிக்கவில்லை. அதன்பிறகு அவர் வன்முறையில் ஈடுபட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது.


கடந்தாண்டு மே மாதத்தின் மத்தியில், இருவருக்கும் இடையே திருமணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அது தீவிரமடைந்து  ஷ்ரத்தாவை ஆப்தாப் கொன்றுள்ளார். 


இந்திய தண்டனைச் சட்டம், 302 மற்றும் 201 ஆகிய பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 150க்கும் மேற்பட்ட சாட்சியங்களின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன" என்றார்.


ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்ட வேண்டும் என்ற எண்ணம் அமெரிக்க க்ரைம் தொலைக்காட்சி தொடரான ​​“டெக்ஸ்டர்” மூலம் பெற்றதாக விசாரணையின் போது ஆப்தாப் போலீசாரிடம் கூறியிருந்தார்.


2019ஆம் ஆண்டில், ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் இருவரும் சந்தித்தனர். இதன் பிறகு, ஆப்தாப்பும் ஷ்ரத்தாவும் மும்பையில் ஒரே கால் சென்டரில் வேலை செய்யத் தொடங்கினர். பின்னர், காதலித்தனர். ஆனால், இவர்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது குடும்பத்தினர் காதலை எதிர்த்துள்ளனர். 


இதனை தொடர்ந்து, மோரோலிக்கு இருவரும் குடிபெயர்ந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அப்தாபே ஷ்ரத்தாவை கொலை செய்து, அவரின் உடலை 35 பாகங்களாக வெட்டி எறிந்துள்ளார். 


காவல்துறை கண்டுபிடித்துவிடுமோ என எண்ணி ஷ்ரத்தாவின் அடையாளத்தை மறைப்பதற்காக அவரின் முகத்தை அப்தாப் எரித்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. 


விசாரணையின் நடுவே, சிசிடிவி காட்சி ஒன்றி வெளியாக அனைவரையும் பதற வைத்தது. அதில், அதிகாலை ஆப்தாப் தனது வீட்டின் வெளியே ஒரு பையை தூக்கி செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இந்த சிசிடிவி கடந்தாண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.