கடந்த டிசம்பர் 4ஆம் தேதி, நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள மொத்தம் 250 மாநகராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 15 ஆண்டு காலமாக டெல்லி மாநகராட்சி பாஜகவின் வசம் இருந்தது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. 250 வார்டுகளில் 134 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி. பெரும்பான்மைக்கு தேவைப்படும் எண்ணிக்கையை காட்டிலும் அதிக இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
வெற்றியை தொடர்ந்து தொண்டர்களுக்கு மத்தியில் பேசிய டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடியின் ஆசியையும் மத்திய அரசின் ஒத்துழைப்பையும் எதிர்நோக்கி இருப்பதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "நானும் உங்களை நேசிக்கிறேன். டெல்லி மாநகராட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்ததற்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
ஆம் ஆத்மியின் இந்த வெற்றி, தலைநகரில் முதல்முறையாக இரட்டை என்ஜின் அரசாங்கத்தை வழங்கியுள்ளது. பாஜக ஒவ்வொரு திருப்பத்திலும் மத்திய அரசையும் துணை நிலை ஆளுநரையும் குடிமை அமைப்பையும் பயன்படுத்தி கொண்டு எங்களை தடுத்தனர். எங்களுக்கு மத்திய அரசின் உதவி தேவை. எங்களுக்கு பிரதமர் மற்றும் மத்திய அரசின் ஆசீர்வாதம் தேவை.
இந்த தேர்தலின் முக்கிய செய்தி என்னவென்றால், ஆக்கபூர்வமான அரசியலையே மக்கள் விரும்புகிறார்கள். எதிர்மறையான அரசியலை அல்ல. அனைத்து கட்சிகளுக்கும், வேட்பாளர்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.
நாங்கள் இது வரை அரசியலில் ஈடுபட்டுள்ளோம். இப்போது நாம் ஒன்றாக வேலை செய்ய வேண்டும். பாஜக மற்றும் காங்கிரஸின் ஒத்துழைப்பை நாங்கள் விரும்புகிறோம். ஒன்றாக இணைந்து டெல்லியை சரி செய்வோம். பள்ளிகளை சரி செய்ய இரவு பகலாக உழைத்தோம்.
மருத்துவமனைகளை சரி செய்ய இரவு பகலாக உழைத்தோம். இன்று டெல்லியை சுத்தப்படுத்தும் பொறுப்பை, ஊழலை ஒழிக்கும் பொறுப்பை கொடுத்துள்ளனர். பல பொறுப்புகள் உள்ளன" என்றார்.
பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, எழு மாநில முதலமைச்சர்கள், மூத்த தலைவர்கள் என தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தனர். இருப்பினும், அக்கட்சியால் 104 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. தொடர்ந்து மோசமான முடிவுகளை சந்தித்து வரும் காங்கிரஸ், இந்த தேர்தலிலும் படுதோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி 9 வார்டுகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது.
மாநகராட்சி தேர்தலில் பாஜகவை முதல்முறையாக தோல்வி அடைய செய்துள்ளது ஆம் ஆத்மி. கடந்த 24 ஆண்டுகளாக, டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கவில்லை என்றாலும், டெல்லி மாநகராட்சி அக்கட்சி வசமே இருந்து வருகிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி 67 இடங்களை கைப்பற்றியது. அந்த தேர்தல் முடிந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது.