பிரபலங்கள், அரசியல் தலைவர்களின் சமூக வலைதள பக்கங்களை ஹேக்கர்கள் ஹேக் செய்வது தொடர் கதையாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, டெல்லி மேயர் ஷெல்லி ஓபராயின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஹேக் செய்யப்பட்ட டெல்லி மேயரின் பேஸ்புக் கணக்கு:


இதுகுறித்து பேசிய டெல்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர், "நான்கைந்து நாட்களுக்கு முன்பு ஓபராயின் பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அவரால் பேஸ்புக் கணக்கை பயன்படுத்த முடியவில்லை" என்றார். தனது பேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய், "சில நாட்களாக எனது ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த முடியவில்லை. அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இதை பதிவிட்டுள்ளேன். 


பேஸ்புக் கணக்கை கூடிய விரைவில் மீட்க முயற்சித்து வருகிறோம். எனது பக்கம் மூலம் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு இருந்தால், அது குறித்து எச்சரிக்கையாக இருக்கவும்" என பதிவிட்டுள்ளார். டெல்லி மேயரின் பேஸ்புக் கணக்கை மீட்டெடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், மீட்க மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளது.


 






சமீபத்தில்தான், தமிழ்நாட்டின் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. அதேபோல, நடிகர் கார்த்தியின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது.


குறிவைக்கப்படும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்:


அதுமட்டுமின்றி, நாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் நோயாளிகள் மற்றும் அவர்களது நோயின் தன்மை குறித்த தகவல்கள் அடங்கிய எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. முதலில் சர்வர் மிகவும் மந்தமாக செயல்படுகிறது. சிறிது நேரத்தில் சரி செய்து விடலாம் என நினைத்த டெக்னீசியன்ஸ்-க்கு, அதன் பின்னர் தான் சர்வர் ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. 


ஹேக் செய்யப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வரை திரும்ப ஒப்படைக்க ஹேக்கர்கள் 200 கோடி ரூபாய் கிரிப்டோகரன்சி தர வேண்டும் என பேரம் பேசினர். எய்ம்ஸ் மருத்துவமனை சர்வரில் முன்னாள் பிரதமர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் உட்பட நாட்டின் குடிமக்களில் சுமார் மூன்று முதல் நான்கு கோடி பேரின் தரவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வர் ஹேக் செய்யப்பட்டது போலவே, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சர்வரை ஹேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது தோல்வியில்தான் முடிவடைந்தது.