டெல்லி ரயில் நிலையத்தில், கடந்த 15ஆம் தேதி இரவு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவிற்காக விடப்பட்ட சிறப்பு ரயிலில் ஏறுவதற்காக மக்கள் காத்திருந்தபோது, இந்த சம்பவம் நடந்தது.
டெல்லி கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?
அதற்கு முக்கிய காரணமாக பிரயாக்ராஜ் செல்லும் இரண்டு ரயில்களின் பெயர்களில் ஏற்பட்ட குழப்பம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதாவது, ரயில்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிடும்போது சரியான பெயர்களை குறிப்பிடவில்லை என்றும் இதனால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.
சம்பவ தினத்தன்று ரயில்களில் செல்லக்கூடிய பயணிகளின் அளவை விட அதிக எண்ணிக்கையில் ரயில் டிக்கெட்கள் விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பிட்ட கோச்சில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் பயணிகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற ரயில்வே விதியே உள்ளது.
நீதிபதிகள் சரமாரி கேள்வி:
இதை மீறி ரயில்வே டிக்கெட்கள் விற்கப்பட்டதாகவும் இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்க முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என டெல்லி ரயில் நிலையத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசின் மீதும் இந்தியன் ரயில்வே மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்தது.
"ரயில் பெட்டிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற சட்டத்தையும் அதிகாரம் இல்லாமல் நுழையும் நபர்களுக்கு அபராதம் விதிக்கும் தற்போதைய சட்டத்தையும் செயல்படுத்த நீங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்க போகிறீர்கள்.
(ரயில்வே சட்டத்தின்) தொடர்புடைய பிரிவுகளைப் பார்த்தால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. இந்த எண்ணிக்கை பெட்டிக்கு வெளியே தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
ஒரு எளிய விஷயத்தை நேர்மறையான முறையில்... எழுத்துப்பூர்வமாகவும், மனப்பூர்வமாகவும்... செயல்படுத்தியிருந்தால், இந்த சூழ்நிலையை (டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசல்) தவிர்த்திருக்கலாம்.
"அவசர நாட்களில்" ரயில்வே அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லலாம். ஆனால், குறிப்பிட்ட அளவில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற விதி சம்பவ தினத்தன்று புறக்கணிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
விற்கப்பட்ட டிக்கெட்டுகளின் எண்ணிக்கை ஏன் பெர்த்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது? இதுதான் பிரச்சனை" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.