புதுடெல்லி: டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு அளவைக் கட்டுப்படுத்தும் வகையில், மாசுபடுத்தும் வாகனங்களின் பயன்பாட்டு உத்தரவை மீறினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.


டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அதனை சமாளிக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. முன்னதாக தேசிய நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், சாலைகள், மின் பகிர்மான கட்டுமானங்கள், பைப்லைன் கட்டுமானங்களுக்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டன. அதேபோல் டெல்லியில் மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரிவோரில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு கோரியுள்ளது.


பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் வாகனங்களை ஒற்றைப் படை, இரட்டைப் படை அடிப்படையில் இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் சமீபத்திய நிலவரப்படி காற்று மாசு 400க்கும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. மீறுபவர்களைப் பிடிக்க காவல்துறை அதிகாரிகள் மற்றும் கண்காணிப்புக் குழுக்கள் வழக்கமான சோதனைகளை மேற்கொள்வார்கள் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.


கிரேடட் ரெஸ்பான்ஸ் செயல் திட்டத்தின்(graded response action plan) விதி IV இன் கீழ், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்வது அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்குவதைத் தவிர, அனைத்து BS-IV வாகனங்களையும், டீசல் லாரிகளும் நகரத்திற்குள் நுழைவதை அரசாங்கம் தடை செய்தது.


"நகரில் காற்றின் தரம் மோசமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (CAQM) பரிந்துரைத்த மாசு எதிர்ப்புத் தடைகளை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. எனவே, குறிப்பிட்ட வாகனங்கள் இயக்க தடையை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ரூ. 20000 அபராதம் வசூல் செய்யப்படும்" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


டெல்லி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள உத்தரவில், சிஎன்ஜி மற்றும் மின்சார லாரிகள் மட்டுமே டெல்லிக்குள் அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. டெல்லியில் பதிவுசெய்யப்பட்ட டீசலில் இயங்கும் நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள், அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்குவதைத் தவிர, அனுமதிக்கப்படாது. மேலும், BS-III பெட்ரோல் மற்றும் BS-IV டீசல் இலகுரக மோட்டார் வாகனங்கள் டெல்லியின் NCTயின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்க தடை விதிக்கப்படும்.


உத்தியோகபூர்வ மதிப்பீட்டின்படி, டெல்லியில் 3 லட்சம் டீசல் இலகுரக வாகனங்கள் BS-VI பிரிவின் கீழ் வராது. மேலும், செல்லுபடியாகும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (PUC) இல்லாத வாகனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நகர அரசு கடுமையாக்கும். மீறுபவர்களைக் கண்டறிய போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். PUC-களை புதுப்பிக்க மறுத்தால் வாகனப் பதிவு நிறுத்தி வைக்கப்படும் என்றும் வாகன ஓட்டிகளுககு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 190(2)ன்படி, செல்லுபடியாகும் PUC சான்றிதழ் இல்லாத வாகன உரிமையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். சனிக்கிழமையன்று நகரின் காற்றின் தரம் மோசமான பிரிவில் பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பிஎம் 2.5 வெளியேற்றத்தில் கிட்டத்தட்ட 30 சதவீதமும், நைட்ரஜன் ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு ஆகியவற்றில் 80 சதவீதமும் போக்குவரத்துத் துறையின் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது