நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அதற்கு தொடர்புடைய பத்திரிகையாளர்கள் வீட்டில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி, அதன் தலைமை செய்தி ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தாவையும் நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் அமித் சக்ரவர்த்தியையும் கைது செய்தனர்.


நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறி, உபா (சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம்) சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. செய்தி நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தி, பத்திரிகையாளரை கைது செய்ததற்கு பத்திரிகையாளர் சங்கங்கள் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை கண்டனம் தெரிவித்தன. 


கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறதா?


இந்திய இறையாண்மையையும் ஒற்றுமையையும் சீர்குலைப்பதற்காக வெளிநாட்டு இருந்து இந்தியாவுக்கு கோடி கணக்கில் பணம் கொண்டு வரப்பட்டதாகவும் அந்த பணம் நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது. ஆனால், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என நியூஸ்கிளிக் தெரிவித்தது.


இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் 10 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இருவருக்கும் வரும் அக்டோபர் 25ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதல் அமர்வு நீதிபதி ஹர்தீப் கவுர், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


இன்றைய விசாரணையின்போது, நியூஸ்கிளிக் செய்தி ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "டெல்லி போலீஸ் மற்றும் அமலாக்கத்துறை விஷயத்தில், 2021இல் டெல்லி உயர் நீதிமன்றத்தால் நான் பாதுகாக்கப்பட்டேன். அதன் உத்தரவுகள் இன்றும் தொடர்கின்றன. எஃப்.ஐ.ஆரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் அபத்தமானது.


மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்பினால் பயங்கரவாதச் செயலா? 


நான் வெடிகுண்டு டைனமைட் அல்லது வேறு எந்த வெடிபொருளையும் பயன்படுத்தியதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. குற்றவாளிகளை பயன்படுத்தியதாகவோ அல்லது மக்கள் பிரதிநிதியை கொலை செய்ததாகவோ என் மீது குற்றம் சுமத்தப்படவில்லை. 


செய்தியை வெளியிடுவதன் மூலமாகவோ, பத்திரிகையாளராகத் தொழில் செய்வதன் மூலமாகவோ, நான் எப்படி பயங்கரவாதச் செயலைச் செய்ய முடியும்? மத்திய அரசின் கொரோனா கொள்கைக்கு எதிராக நான் ஏதேனும் கட்டுரையில் கேள்வி எழுப்பினால், அது பயங்கரவாதச் செயலா?


குற்றம்சாட்டப்பட்டவர் பத்திரிகையாளராக நன்மதிப்பை பெற்றவர். சுதந்திரமான குரலுக்கு பெயர் பெற்றவர். ஆனால் அவர்கள் (ஏஜென்சி) உபா சட்டத்தின் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். உபா சட்டத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள கௌதம் நவ்லகாவுடன் நான் தொடர்பில் இருப்பதாக ஏஜென்சி குற்றம்சாட்ட்யுள்ளது.


அவர் உபா சட்டத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதால், இவரும் உபா சட்டத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். ஒருவருடன் பழகுவது குற்றமாகிவிட்டதா? அவர் சக பத்திரிகையாளர். 1991ல் இருந்தே அவரை இவருக்கு தெரியும். இப்போது திடீரென்று இந்த நட்பின் காரணமாக இவரை குறிவைக்கிறார்கள்" என வாதிடப்பட்டது.