மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது. இதில் அதிகம் நெருக்கடிக்கு உள்ளானது ஆம் ஆத்மி கட்சிதான்.


எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைக்கிறதா ED?


டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லியின் துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், கட்சியின் செய்தித்தொடர்பு பிரிவு பொறுப்பாளர் விஜய் நாயர் ஆகியோர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.


மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், விஜய் நாயரை தொடர்ந்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவார் என கடந்த சில நாள்களாகவே தகவல் வெளியான வண்ணம் உள்ளது. ஆனால், இதுவரை அதுபோன்று எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இப்படிப்பட்ட சூழலில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், 5 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.


ஹேமந்த் சோரன் வரிசையில் கெஜ்ரிவாலுக்கு தரப்படும் நெருக்கடி:


இந்த நிலையில், சம்மனுக்கு ஆஜராகவில்லை எனக் கூறி, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை முறையிட்டுள்ளது. அமலாக்கத்துறையின் புகாரை விசாரித்த கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா, வரும் பிப்ரவரி 17ஆம் தேதி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.


குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 190 மற்றும் 200இன் கீழ் சம்மனுக்கு ஆஜராகவில்லை என்றும் பண மோசடி தடுப்பு சட்டம் பிரிவு 50இன் கீழ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.


தனக்கு சட்டவிரோதமாக சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கெஜ்ரிவால், "அது எதுவும் செல்லாது. இதுபோன்று, கடந்த காலத்தில் குறிப்பிட்ட காரணத்தை சொல்லாமல் பொதுவாக அனுப்பப்பட்ட நோட்டீஸை செல்லாது என அறிவித்து அதை நீதிமன்றங்கள் ரத்து செய்துள்ளன. அரசியல் சதியின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ் அனுப்பப்படுகிறது" என குற்றஞ்சாட்டினார்.


நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஹேமந்த் சோரன், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சி தலைவரான ஹேமந்த் சோரனை தொடர்ந்து தற்போது கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி தரப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.