185 பயணிகளுடன் டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென தீ பிடித்தது. இதையடுத்து, பாட்னாவில் அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.






 


பாட்னாவிலிருந்து புறப்பட்ட விமானத்தில் பறவை மோதியதில் இடது என்ஜினில் தீ பிடித்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர். தரையிறக்கும்போது, விமானத்தில் இடது என்ஜினில் தீ எரிந்து கொண்டிருந்தது அங்கிருந்த மக்கள் எடுத்த வீடியோவில் பதிவாகியுள்ளது.






 


பறவை மோதியதன் காரணமாகவே ஒரு என்ஜினில் தீ பிடித்ததாக விமான போக்குவரத்துத்துறை இயக்குநரகத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளின்படி, என்ஜின் மூடப்பட்டு பாட்னா விமான நிலையத்தில் விமான தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். யாருக்கும் எந்த விதமான காயங்களும் ஏற்படவில்லை என பாட்னா மூத்த காவல்துறை  கண்காணிப்பாளர் மானவ்ஜித் சிங் தில்லான் தெரிவித்துள்ளார்.






 


இதுகுறித்து பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் கூறுகையில், "விமானத்தில் தீப்பற்றியதை உள்ளூர்வாசிகள் கவனித்து, மாவட்ட மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்தனர். டெல்லி செல்லும் விமானம் பாட்னா விமான நிலையத்திற்கு திரும்பியது. 185 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்" என்றார்.