Delhi Assembly Election Result 2025: டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தோல்விய சந்தித்துள்ளனர்.
டெல்லி சட்டமன்ற தேர்தல்:
டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 40-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதனால், 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தலைநகரில் பாஜக ஆட்சி அமைய இருப்பதை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேநேரம், யாரும் எதிர்பாராத விதமாக, கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி ஆட்சிக் கட்டிலிலிருந்து இறங்க உள்ளது. வெறும் 20+ இடங்களில் மட்டுமே அக்கட்சி முன்னிலை வகித்து வருகிறது.
அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி
ஆம் ஆத்மி ஆட்சியை இழக்குமென பல தேர்தல் கணிப்புகள் தெரிவித்து இருந்தன. ஆனால், கெஜ்ரிவால் தோற்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரது சொந்த தொகுதியான புது டெல்லியில், பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் 3 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஒட்டுமொத்த ஆம் ஆத்மி கட்சியையே ஆட்டம் காண செய்துள்ளது. அதோடு, மற்றொரு முன்னாள் மூத்த அமைச்சரான மணிஷ் சிசோடியா ஜங்புரா தொகுதியில், சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.
ஆம் ஆத்மியின் தோல்விக்கான காரணங்கள்:
1. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத அரசு
பல்வேறு கவர்ச்சிகரமான இலவச திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், கடந்த 10 ஆண்டுகளில், டெல்லியில் வளர்ச்சிப் பணிகள் கேள்விக்குறியாகியுள்ளன. 2015 இல் அனைவருக்கும் குழாய் நீர் இணைப்பு என்ற வாக்குறுதியும் 'டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து' என்ற வாக்குறுதியும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. 'ரோஸ்கர் பட்ஜெட்' மற்றும் '20 லட்சம் வேலைகளை உருவாக்குதல்' என்ற வாக்குறுதிகளின் நிலைமையும் அதுவே. யமுனை தொடர்ந்து மாசுபடுவது, நகரத்தின் காற்று மாசுபாடு ஆட்சிக்கு எதிரான வாக்கு வங்கியாக உருவெடுத்தது.
2. கெஜ்ரிவால் எனும் பிராண்ட் சிதைந்தது
கெஜ்ரிவால் சாமானியர்களின் தலைவராகவும், ஊழல்களுக்கு மாற்றான பிராண்ட் ஆக கருதப்பட்டதன் விளைவாகவே, அவரது தலைமையிலான ஆம் ஆத்மிக்கு டெல்லி மக்கள் வாக்களித்தனர். ஆனால், டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் பெயர் மோசமாக சேதமடைந்தது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மற்ற மாநிலங்களில் தேர்தல்களுக்கு முறைகேடாக சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தியதாக பரவிய பேச்சுகளாலும் கெஜ்ரிவால் மற்றும் அவரது கட்சியின் ஊழல் எதிர்ப்பு பிம்பம் பாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கை இழந்ததால் முக்கிய எம்எல்ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைந்ததும், ஆம் ஆத்மி கட்சி இந்திய கூட்டணியில் இருப்பது குறித்து முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்ததும் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
3. தொலை தூர திட்டங்களுக்கான பஞ்சம்
நீண்ட காலத்திற்கான தொலைநோக்கு திட்டங்களை முன்னெடுக்காததும், ஆம் ஆத்மியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும். எந்தவொரு உறுதியான சித்தாந்தத்தையும் அல்லது தொலைநோக்குப் பார்வையையும் கொண்டிருக்காமல், டெல்லியை மையமாகக் கொண்ட வளர்ந்து வரும் ஒரு கட்சியாகவே உருவெடுக்க தொடங்கியது. இதன் விளைவாக, மக்கள் எதிர்பார்த்த ஒரு மாற்று அரசியலையோ அல்லது அதைப் போன்ற ஒன்றையோ வழங்க ஆம் ஆத்மி தவறிவிட்டது.
4. ஆட்சிக்கு எதிரான மனநிலை
தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்த ஒரு கட்சியின் மீது அதிருப்தி நிலவுவது என்பது வழக்கமே. அதுதான் தற்போது ஆம் ஆத்மிக்கும் ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்டும் நோக்கில் பல இலவச திட்டங்களை அறிவித்தாலும், அது கெஜ்ரிவாலுக்கு பலன் அளிக்கவில்லை. மறுபுறம், பாஜக கணிசமாக புத்துயிர் பெற்ற விருப்பமாக உருவெடுத்துள்ளது, மேலும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி உயர்வு, வாக்காளர்களின் கவனத்தை பாஜக பக்கம் திருப்பியது. அதன் விளைவாகவே ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் அரியணையை இழந்துள்ளது.