தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு தீவிரமான நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு, சில வகை வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


காற்று மாசால் கடும் கட்டுப்பாடுகள்:


டெல்லியில் அக்டோபர் மாதத்திற்கு பின் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி வரை காற்று மாசு கொஞ்சம் கொஞ்சமாக டெல்லியில் அதிகரித்துக்கொண்டே செல்லும். இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தொடர் அறிவுறுத்தல்களை வழங்கி இருந்தது. 


தீபாவளி அன்று கடும் கட்டுப்பாடுகளை மீறி டெல்லியில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதன் காரணமாக, டெல்லியில் காற்று மாசு மோசமான நிலைக்கு சென்றது. காற்றுன் தரம் மோசமாகி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


Graded Response Action Plan 3 என்ற செயல் திட்டத்தை காற்றின் தர மேலாண்மை ஆணையம் அமல்படுத்தியுள்ளது. நாளை காலை 8 மணி முதல் அத்தியாவசியமற்ற கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும் கட்டிடங்களை இடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 


திணறும் தலைநகரம்:


டெல்லி, குருகிராம், காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் கௌதம் புத் நகர் போன்ற தேசிய தலைநகர் (NCR) பகுதிகளில் BS-III வகையை சேர்ந்த பெட்ரோல் வாகனங்களையும் BS-IV வகையை சேர்ந்த டீசல் வாகனங்களையும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தேசிய பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சில பொது உள்கட்டமைப்பு தொடர்பான கட்டுமான பணிகளுக்கு இந்த தடை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டெல்லிசுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களில், இந்த பருவத்தில் முதல் முறையாக டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 400ஐ தாண்டியுள்ளது.


கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 'மோசம்' மற்றும் 'மிகவும் மோசமான' பிரிவில் இருந்த காற்றின் தரக் குறியீடு திடீரென 'கடுமையான' நிலைக்கு சென்றது. ஏன் இப்படி நடந்தது என பலரின் மனதில் கேள்விகளை எழுப்பியுள்ளது.


மலைப்பகுதியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக, டெல்லியில் வெப்பநிலையில் சரிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக வட இந்தியா முழுவதும் காலை மற்றும் மாலை நேரங்களில் வறண்ட சூழல் உருவாகியுள்ளது" என்றார்.