உலகம் முழுவதும் பெரும்பாலான வர்த்தகம் கடல்வழியிலே நடக்கிறது. இதனால், பல நாடுகள் தங்களது கடல் எல்லையில் பன்மடங்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில், கடந்த 23ம் தேதி சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு அரபிக்கடல் வழியாக மங்களூர் துறைமுகம் நோக்கி வந்த எம்.வி.கெம் ப்ளூட்டோ மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.


ட்ரோன் தாக்குதல்:


இந்த தாக்குதல் போலவே மற்றொரு வணிக கப்பலான எம்.வி. சாய்பாபா செங்கடலில் பயணித்து வந்திருந்தபோது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. அரபிக்கடல், செங்கடலில் நடத்தப்பட்ட இந்த ட்ரோன் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், இந்த ட்ரோன் தாக்குதல் குறித்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் பேசியுள்ளார். இதுதொடர்பாக, அவர் பேசியுள்ளதாவது, “ கடல் கொந்தளிப்பு தற்போது சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதார சக்தி சில சக்திகளுக்கு பொறுப்பையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அரபிக்கடலில் எம்.வி.கெம் ப்ளூட்டோ மீதும், செங்கடலில் எம்.வி.சாய்பாபா மீதும் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியதை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.


கடும் நடவடிக்கை:


இந்திய கடற்படையினர் கடலில் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளனர். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முழு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திலும் இந்தியா பாதுகாப்பு வழங்குகிறது. இந்த பகுதியில் கடல் வாணிபம் வானம் வரை உயர்வதை உறுதி செய்வோம். இதற்காக, நட்பு நாடுகளுடன் இணைந்து கடல் வழிப்பாதைகளையும், கடல்சார் வர்த்தகத்தையும் பாதுகாப்போம்.


இவ்வாறு அவர் பேசினார்.


இந்த ட்ரோன் தாக்குதலுக்கு பிறகு இந்திய கப்பல்படை ஐ.என்.எஸ். மோர்முகோவ், ஐ.என்.எஸ். கொச்சி மற்றும் ஐ.என்.எஸ். கொல்கத்தா ஆகிய மூன்று போர்க்கப்பல்களை இந்திய கடல் எல்லையில் நிறுத்தியுள்ளது.


ட்ரோன் தாக்குதலுக்கு ஆளாகி மங்களூர் வந்துள்ள வணிகக்கப்பலான எம்.வி.கெம்ப்ளூட்டோவை இந்திய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.வி. சாய்பாபா மற்றும் எம்.வி. கெம்ப்ளூட்டோ கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போலவே நார்வே நாட்டின் எம்.வி. ப்ளாமனென் ரசாயன டேங்கர் கப்பல் மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. எம்.வி. கெம் ப்ளூட்டோ மீது தாக்குதல் நடத்திய ட்ரோன் ஈரானில் இருந்து ஏவப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தகவல் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: ABP-C Voter Opinion Poll: சாதிவாரி கணக்கெடுப்பு வேலைக்கு ஆகல! இதுதான் மக்களின் முக்கிய பிரச்னை - கருத்துக்கணிப்பில் தகவல்


மேலும் படிக்க: ABP-C Voter Opinion Poll: வடக்கில் பாஜக வேற லெவல்.. ஆனால் தெற்கில் ஒன்னும் செய்ய முடியல.. கருத்துக்கணிப்பில் பகீர்