பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை, இன்று அதிகாலை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர் என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் அழித்துள்ளோம் எனவும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளுக்கு பதிலடி:
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில், டி.ஆர்.எஃப் பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தியதில் 26 பேர் உயிரிந்தனர். இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, சுமார் 01.05 மணி முதல் 01.30 மணிவரை, சுமார் 25 நிமிட தாக்குதல் நடத்தியதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் கொல்லப்பட்டதாகவும் , 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
”இலக்குகளை தீர்மானித்தோம்”
இந்நிலையில், இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்த தகவலானது, நமது இந்திய பாதுகாப்பு படைகள் வீரத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தி, ஒரு புதிய வரலாற்றைப் படைத்தன. இந்திய ஆயுதப்படைகள் துல்லியத்தன்மை, விழிப்புணர்வு மற்றும் உணர்திறன் ஆகியவற்றுடன் செயல்பட்டன. சரியான நேரத்தில் துல்லியமாக அழிக்கப்படவேண்டிய இலக்குகளை நாங்கள் தீர்மானித்தோம்.
”அனுமன் கொள்கை”
பயங்கரவாதிகள் மீதான தாக்குதலின்போது, பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதிலும் நமது ஆயுதப்படைகள் திறம்பட செயல்பட்டன. அசோக வனத்திற்குள் செல்லும்போது, அனுமன் பின்பற்றிய கொள்கையை நாங்கள் பின்பற்றினோம். எங்கள் அப்பாவிகளைக் கொன்றவர்களை மட்டுமே நாங்கள் குறிவைத்தோம் என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.
இந்திய வீரர்கள் துல்லியம், விழிப்புணர்வு மற்றும் மனிதாபிமானத்தையும் காட்டினர் என்று சொல்லலாம். இந்த தருணத்தில், இந்திய நாட்டின் சார்பாக, நமது வீரர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.