8ஆவது ஊதியக்குழு சம்பளத்தை உயர்த்துவதற்கு முன்பே மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றொரு இனிப்பான செய்தி வந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உயர்கிறது மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம்:

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம். தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி கணக்கிடப்படும்.

அந்த வகையில், தற்போது, மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. 53 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 55 சதவிகிதமாக உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம், 50 சதவிகிதமாக இருந்த அகவிலைப்படி 2 சதவிகிதம் உயர்த்தப்பட்டது.

ஊதியக்குழு கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்:

அதேபோல, விரைவில் 8ஆவது ஊதியக்குழு அமைக்கப்பட உள்ளது. ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மாதத்திற்கு ரூ. 19,000 வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் சுமார் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

8ஆவது சம்பளக் குழுவை அமைப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், மத்திய அரசு, அடுத்த மாதத்தில் குழுவை அமைக்கலாம் என்றும், அதன் பரிந்துரைகள் 2026 அல்லது 2027 க்குள் நடைமுறைக்கு வரும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.

கடைசியாக, 7வது ஊதியக்குழு, கடந்த 2014ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.

 

8வது ஊதியக் குழுவின் முதன்மைப் பணியானது, தற்போதைய பொருளாதார சூழல் மற்றும் பணவீக்க விகிதங்களுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களின் (CGEs) ஊதியம், சலுகைகள் மற்றும் ஓய்வூதியங்களை ஆய்வு செய்து பரிந்துரைப்பதாகும்.