தலித் இளைஞர் மீது சாதி வெறியர்கள் சிலர் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஊர்வலத்தை பார்த்து கொண்டிருந்த இளைஞரை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து, அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அவரது ஆடைகளை கழற்றி பிறப்பிறுப்பில் தாக்கி உள்ளனர். இந்த சம்பவம், ராஜஸ்தானில் நடந்துள்ளது.

Continues below advertisement


தலித் இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்:


சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஃபதேபூர் பகுதியில் தலித் இளைஞர் மீது சாதி வெறியர்கள் சிலர் சிறுநீர் கழித்துள்ளனர். திருமண ஊர்வலத்தை பார்த்து கொண்டிருந்த அவரை அருகில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்து, இரண்டு பேர் கடுமையாக தாக்கியுள்ளனர். 


பின்னர், அவர் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அவரது ஆடைகளை கழற்றி பிறப்பிறுப்பில் தாக்கி உள்ளனர். கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்து, அந்த இளைஞர் அதிர்ச்சியில் இருந்ததால், கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினரால் ஏப்ரல் 16ஆம் தேதி, இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.


சாதி வெறியர்கள் செய்த செயல்:


குடும்பத்தினர் அளித்த புகாரில், "அவர்கள் (குற்றம் செய்தவர்கள்) குடிபோதையில் இருந்தனர். அவர்கள் என்னை ஒரு பாட்டிலால் அடித்தார்கள். என் மீது சிறுநீர் கழித்தார்கள். சாதிய ரீதியாக திட்டினர். தாங்கள் செய்ததை வீடியோவையாக பதிவு செய்திருப்பதாகவும் இந்த சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் அதை சமூக ஊடகங்களில் பகிர்வதாக மிரட்டினார்கள்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுகுறித்து துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அரவிந்த் குமார் கூறுகையில், "இந்த விவகாரத்தில் நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.


இதுகுறித்து ராஜஸ்தான் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான டிகா ராம் ஜூலி கூறுகையில், "இதுதான் இன்றைய ராஜஸ்தானின் யதார்த்தம். ஒரு தலித் இளைஞர் கடத்தப்பட்டு, அடித்து, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, சிறுநீர் கழிக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டார். இது ஒரு திரைப்படக் காட்சி அல்ல, இது ஒரு வெட்கக்கேடான உண்மை" என்றார்.