அதிதீவிர புயலாக மாறும்:


அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் தேஜ் புயல் இன்று மாலைக்குள் அதி தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் நேற்று வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் அதாவது 19 ஆம் தேதி அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, பின்னர் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும் மாறியது.


இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த புயலுக்கு தேஜ் என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது. தற்போது இந்த புயல் தீவிரமடைந்து உள்ளதாகவும் இன்று மாலைக்குள் அதி தீவிர புயலாக உருமாறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தென்மேற்கு திசையை நோக்கி நகர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






இன்று காலை நிலவரப்படி ஏமன் (யேமன்) நாட்டின் சொகோட்ராவில் இருந்து 260 கி.மீ. தொலைவிலும் ஓமனின் சலாலாவின் தெற்கு- தென்கிழக்கில் 630 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தேஜ் அதிதீவிர புயலாக மாறிய பின்னர் ஏமன்- ஓமன் இடையே ஏமனின் அல் கைதா மற்றும் ஓமனின் சலாலா இடையே அக்டோபர் 24  ஆம்  தேதி மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை:


முதலில் இந்த புயல் காரணமாக மகாரஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளில் கடுமையான பாதிப்பு இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தேஜ் புயல் வேறு திசையை நோக்கி நகர்வதால் மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பாதிப்பு ஏற்படாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேஜ் புயல் காரணமாக மீனவர்கள் வரும் 24 ஆம் தேதி வரை அரபிக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீனவர்களை உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


இதேபோல் வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 3 நாட்களுக்கு வடக்கு – வடகிழக்கு திசையில் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் நோக்கி நகரக்கூடும். இதனால் மீனவர்கள் 26 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் ஆழ்கடல் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் வானிலை மையம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Provoke Awards 2023: கலைத்துறையில் சாதனை.. எஸ்.வி.சேகர் உள்ளிட்ட 4 பிரபலங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது..!