குஜராத்தை அச்சுறுத்தி வரும் பிபர்ஜாய் புயல் இன்று மாலை கரையை கடக்க தொடங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில், குஜராத் கடற்கரை பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நள்ளிரவுக்குள் புயல் கரையை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் டாக்டர் எம் மொகபத்ரா கூறுகையில், "புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல், இன்னும் 70 கி.மீ தொலைவில் இருந்து கரையை நோக்கி நகர்கிறது. நள்ளிரவுக்குள் கரையை கடந்துவிடும். இரவு 10 மணியளவில் கரையை தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 கிமீ தொலைவுக்கு புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்தில் உள்ளது. சூறாவளி நெருங்கும் போது இது மேலும் அதிகரிக்கும்" என்றார்.
பிபர்ஜாய், மூன்றாவது வகை புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, மிக தீவிர புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஒரு மணி நேரத்திற்கு 115 முதல் 125 கிமீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
குஜராத்தின் புஜ் மற்றும் கட்ச் பகுதிகளில் பலத்த காற்று வீசி வருவதோடு, கடலோரப் பகுதியில் கடல் அலை தாக்கியுள்ளது. குறிப்பாக, துவாரகா, மாண்ட்வி மற்றும் மோர்பியை கனமழை மற்றும் பலத்த காற்று தாக்கியுள்ளது. மும்பையில் கடல் அலை மற்றும் பலத்த காற்று தொடர்ந்து வீசி வருகிறது.
குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையில் காந்தி நகரில் புயலை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிட்டத்தட்ட ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கடற்கரையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் கிட்டத்தட்ட 20 கிராமங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.
தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) பதினெட்டு குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) 12 குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டிடத் துறையின் 115 குழுக்கள் மற்றும் மாநில மின்சாரத் துறையின் 397 குழுக்கள் கடலோர மாவட்டங்களில் களத்தில் தயார் நிலையில் உள்ளனர்.