உலகப் பொருளாதாரத்தை தீர்மானிப்பதிலும், உலக வர்த்தகத்தை நிர்வகிப்பதிலும், மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலையை தீர்மானிப்பதிலும் பெட்ரோல் மற்றும் டீசல் முக்கிய பங்காற்றுகிறது.


கச்சா எண்ணெய் விலை சரிவு:


பெட்ரோல் மற்றும் டீசல் கச்சா எண்ணெயில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்தே உலகளவில் பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு எவ்வளவு விற்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகும்.


இந்த சூழலில், உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 84 டாலராக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில், கடந்த 17ம் தேதி முதல் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 74 டாலராக விற்பனையாகி வருகிறது. கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 10 டாலர் வரை குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறையுமா பெட்ரோல், டீசல் விலை:


கடந்த 10 நாட்களுக்கும் கச்சா எண்ணெய் விலை குறைவாக சரிந்தே காணப்படுவதால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கச்சா எண்ணெய் விலை சரிவால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 15 ரூபாயும், டீசலுக்கு ரூபாய் 12ம் லாபமாக நிறுவனங்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களின் கடந்த கால இழப்புகள் சரி செய்யப்பட்டுள்ளதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக தர ஆய்வு நிறுவனம் இக்ரா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.


விரைவில் வெளியாகும் அறிவிப்பு:


இதன்படி, பார்த்தால் பெட்ரோல் மற்றும் டீசல் ரூபாய் 3 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது. அதன்பின்பு, அதே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை விற்பனையாகி வருகிறது.


சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவு மட்டுமின்றி நாட்டின் மிகப்பெரிய மாநிலமான மகாராஷ்ட்ராவிலும், வட இந்தியாவில் முக்கியமான மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு மாநிலங்களும் பா.ஜ.க.விற்கு சவாலான மாநிலமாக இருப்பதால் தேர்தலை கருத்தில் கொண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களுக்கு மக்களும், வாகன தயாரிப்பு நிறுவனங்களும் மாறி வருகின்றன. இந்தியாவிலும் மின்சார வாகன உற்பத்தியை அரசும், நிறுவனங்களும் ஊக்குவித்து வருகின்றனர். மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் தேவை உலகளவில் குறைந்து வருவதால் தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு குறைவு என்றே பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.