(Source: ECI | ABP NEWS)
Crime News: இரக்கமில்லாத கொடூரன்.. சொத்துக்காக தாயைக் கொன்ற மகன்! உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்
கொலை செய்த பின், தன் குற்றத்தை மறைக்க கிஷன், தாயின் உடலை கயிற்றில் தொங்கவிட்டுத் தற்கொலை போல சித்தரித்துள்ளார்,

உத்தரப் பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டம் நிலம் மற்றும் பணத்தின் பேராசையில் ஒரு மகன் தன் தாயையே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியின் ஆழ்த்தியுள்ளது
பேராசையால் நடந்த கொலை
மஞ்சன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெர்வா கிராமத்தைச் சேர்ந்த கிஷன் கிஷோர் (30) என்பவர் தனது தாயார் ஷீலா தேவி (55)யுடன் சில நாட்களாக மனக்கசப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. குடும்ப சொத்துகள் மற்றும் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3 லட்சம் பணம் இருந்துள்ளது
ஷீலா தேவி, தனது நிலத்தையும் பணத்தையும் மற்றொரு மகனின் பெயரில் மாற்றப் போகிறார் என்ற சந்தேகம் கிஷனுக்குள் கோவமாக மாறியது. அதே கோபத்திலும் பேராசையிலும், கடந்த வியாழக்கிழமை மாலை தாயை அவர் கழுத்தை நெரித்து கொலை செய்தார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலை போல நாடகம்
கொலை செய்த பின், தன் குற்றத்தை மறைக்க கிஷன், தாயின் உடலை கயிற்றில் தொங்கவிட்டுத் தற்கொலை போல சித்தரித்துள்ளார், இந்த சம்பவத்தை முதலில் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசுக்கு தகவல் அளித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆரம்பத்தில் இது தற்கொலை என கருதப்பட்டாலும், பிரேத பரிசோதனை அறிக்கையில் உண்மையான காரணம் வெளிச்சமிட்டது — மரணம் கழுத்தை நெரித்தல் காரணமாக ஏற்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.
போலீஸ் விசாரணையில் வெளிச்சம்
கௌசாம்பி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் தலைமையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. மின்னணு ஆதாரங்கள், தொலைபேசி பதிவுகள் மற்றும் சம்பவ இட ஆய்வுகள் மூலம் கிஷன் கிஷோரின் மீது சந்தேக நிழல் விழத் தொடங்கியது.
பின்னர் தீவிர விசாரணையில், கிஷன் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது. அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில், “தாய் நிலத்தை மற்ற மகனுக்குக் கொடுக்கப் போகிறார் என்ற சந்தேகம் தான் இந்தச் செயலுக்கு காரணம்” என கூறியுள்ளார்.
உறவினர் வீடில் நடந்த கொலை
இறந்த ஷீலா தேவி, சித்ரகூட் மாவட்டத்தின் கதவானியா கிராமத்தைச் சேர்ந்தவர். ஆனால், சில மாதங்களாக கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள உறவினர் ஜெய் சிங்கின் வீட்டில் தங்கி வந்தார்.அங்கு தங்கியிருந்தபோது தன் தாயைத் தன் கைகளால் கொன்ற கிஷனின் செயல், கிராமத்தை உலுக்கி விட்டது.
பிரேத பரிசோதனை அறிக்கையிலும், மின்னணு ஆதாரங்களிலும் கிஷன் கிஷோரின் குற்றம் உறுதியாகியதும், போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதிகாரிகள் பேச்சு
“பிரேத பரிசோதனை அறிக்கையால் தற்கொலை என்ற சந்தேகம் முற்றிலும் நீங்கியது. மின்னணு ஆதாரங்கள் மற்றும் விசாரணையின் அடிப்படையில், மகனே தாயை கொன்றது உறுதி செய்யப்பட்டது,” என காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறினார்.இந்த சம்பவம், குடும்ப உறவுகள் சிதைந்து பேராசை எவ்வளவு கொடூரமாக மாற முடியும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
“பணம் மற்றும் சொத்துக்காக தாயையே உயிரோடு கொல்வது மனிதநேயத்தின் எல்லைகளை மீறிய செயல்,” என அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.






















