இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவல் சற்று குறையத் தொடங்கியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அத்துடன் உயிரிழப்புகளும் சற்று குறைய தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக மத்திய அரசு சார்பில் தினமும் பத்திரிகைக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ’நிதி ஆயோக்’-ன் கொரோனா கட்டுபாட்டு குழுவின்  தலைவர் வி.கே. பால் மூன்றாவது அலை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். 


அதில், "இந்தியாவில் தற்போது இரண்டாவது அலையின் வேகம் குறைய தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறையின் தரவுகளின்படி இந்தியாவில் கடந்த மே 7ம் தேதி இரண்டாவது அலை உச்சத்தை தொட்டது. அதன்பின்னர் தற்போது தினசரி பாதிப்பு 68 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மேலும் 377 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு,உறுதியாகும் சதவிகிதம் 5 சதவிகிதத்துக்கும் குறைவாக பதிவாகி வருகிறது. அத்துடன் 257 மாவட்டங்களில் தினசரி தொற்று பாதிப்பு 100க்கும் கீழாக பதிவாகி வருகிறது.




இது தானாகக் குறையவில்லை. நாம் எடுத்த கடுமையான நடவடிக்கைகள்தான் தற்போது தொற்று பரவலை குறைத்துள்ளது. தற்போது பல்வேறு மாநிலங்களில்  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக மக்கள் கூட்டமாக கூடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பும் குறைந்துள்ளது.  தொற்று பரவல் குறைந்துள்ளது என்று நினைத்து நாம் மீண்டும் ஜனவரி, பிப்ரவரியில் இருந்ததை போல் அலட்சியமாக இருக்கத் தொடங்கினால் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்ககூடும்.


அதிலும் குறிப்பாக மீண்டும் நாம் பழைய நிலைக்கு திரும்பினால் தொற்று பரவல் இரண்டாவது அலையைவிட மிகவும் வேகமாக பரவும். அத்துடன் விரைவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் உச்சத்தை தொடும். ஆனால் நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றி வந்தோம் என்றால் அந்த அலை வருவதற்கு கூட வாய்ப்புகள் குறையும். அப்படி ஒருவேளை வந்தாலும் அது இவ்வளவு தீவிரமாக இருக்காது. நாம் அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். அதுவரை நாம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மிகவும் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும்"  எனத் தெரிவித்துள்ளார்.




ஏற்கெனவே இந்தியாவில் மூன்றாவது அலை வந்தால் அது குழந்தைகளை அதிகமாக தாக்கும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த அலை வரும் நேரம் மற்றும் தீவிரம் தற்போது உள்ள ஊரடங்கு தளர்வு மற்றும் தடுப்பூசி செலுத்தும் விகிதம் ஆகியவற்றிலிருந்துதான் தெரியும் என்றும் வல்லுநர்கள் கூறியுள்ளனர். தற்போது வி.கே.பாலும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார். எனவே மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்தாலும் நாம் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று வல்லுநர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர். 


மேலும் படிக்க: கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர் கவனத்துக்கு..!